லாரி கரும்பை ருசி பார்க்க சாலைக்கு வந்த யானை
By DIN | Published On : 24th June 2019 08:21 AM | Last Updated : 24th June 2019 08:21 AM | அ+அ அ- |

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்ற நிலையில், அங்கு வந்த யானை கரும்புகளைத் தின்றதால் மைசூரு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் லாரிகள் மூலம் ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு ஏற்றிய லாரி, ஆசனூர் பகுதியில் உள்ள உணவகம் முன் டீசல் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை நின்றது.
இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் டீசல் வாங்க சென்றார். அப்போது ஆசனூர் வனப் பகுதியில் கரும்பு வாசத்தை நுகர்ந்த யானை, லாரியை நோக்கி வந்தது. பின்னர் அது லாரியில் இருந்து கரும்புகளைத் தந்தத்தால் முறித்துத் தின்றது. சாலையின் நடுவே யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை இயக்காமல் காத்திருந்தனர். இதனால் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானை, சுமார் ஒரு மணி நேரமாக லாரியில் இருந்த கரும்பைத் தின்று கொண்டு இருந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்லிடப்பேசியில் படம் பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர் யானையைக் காட்டுக்குள் விரட்டினர்.