மண்டல அலுவலர்களுக்குப் பயிற்சிக் கூட்டம்

விதிமீறல்களை கண்காணிப்பதுடன், வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தினார். 


விதிமீறல்களை கண்காணிப்பதுடன், வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தினார். 
மக்களவை தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தலைமையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  அப்போது அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் பணியாற்ற 186 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 18 மண்டல அலுவலர்கள், ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 21 மண்டல அலுவலர்கள் என 39 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மண்டல அலுவலர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும். வாக்குப் பதிவு மையங்களின் அருகில் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களது விளம்பரங்கள் அல்லது அவர்களைச் சார்ந்த எந்தவொரு விளம்பரத்தட்டிகளும் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து முறையான பயிற்சி எடுத்து அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அதன் மூலம் உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்களை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். 
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பிற தனியார் கூடங்களில் முறையாக அனுமதி பெறாமல் நடைபெறும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் உடனடியாக காவல் துறை மற்றும் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் முறையாக எடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
இதுபோல் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும்  நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரம் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், தேர்தல் பணியாற்றும் மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com