ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மீண்டும் பணி: அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு
By DIN | Published On : 24th March 2019 03:27 AM | Last Updated : 24th March 2019 03:27 AM | அ+அ அ- |

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்தில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக வருவாய்த் துறையில் மொத்தம் 12,616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி 1,000 ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படவுள்ளது. நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஓராண்டு அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை பணியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில் ஓய்வுபெற்றவர்களுக்குப் பணி வழங்கி உள்ளதற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் பாஸ்கர்பாபு கூறியதாவது:
தமிழகத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆனால், இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களை தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொகுப்பூதியம் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கு வேலை வழங்குவதை எதிர்த்துதான் அண்மையில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தியது. ஆனாலும், அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
தேர்தல் பணி பாதிப்பு என்று கூறி 1,000 ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்துள்ளது.
இதைத் தேர்தலுக்கு பிறகும் அப்படியே தக்க வைத்துக்கொள்ளும். அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.