ஈரோடு மாநகராட்சியில் பெருகும் நாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 07:25 AM | Last Updated : 15th May 2019 07:25 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு, ஹோட்டல், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் மதுக்கடை பார்களில் இருந்து வெளியே கொட்டப்படும் உணவுக் கழிவைத் தேடி, ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று, சண்டையிடுவதாலும் சாலையின் குறுக்கே ஓடி வருவதாலும், அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அத்துடன் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை நீண்ட தூரம் வரை விரட்டிச் செல்வதும் வாடிக்கை.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெறுகின்றனர். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து விஷ முறிவு ஊசி போடுகின்றனர். தினந்தோறும் புதிதாக நாய்க் கடிக்கு சிகிச்சைக்கு வருபவர்களும் தொடர் சிகிச்சைக்காக வருபவர்களுமாக அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடி சிகிச்சை பிரிவில் கூட்டம் அதிகரிக்கிறது.
மாநகராட்சிப் பகுதியில் 7,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன என்கின்றனர் அதிகாரிகள். கடந்த 8 ஆண்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பொதுமக்களை நாய்க் கடியில் இருந்து தடுக்கவும், வெறி நாய்களைக் கண்டறியவும், மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் அமைப்பு மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து நாய்களைப் பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாய்க்கடியின் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு க்யூமன் டிப்ளாய்டு செல் வேக்ஸின் என்னும் ஊசி மருந்து போடப்படுகிறது. இந்த மருந்து வெளி மார்க்கெட்டில் ஒரு வயலால் (20 மி.லி) 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக போடப்படுகிறது.
இதனால் வழக்கமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி படைத்தவர்கள் கூட நாய்க்கடியின் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.
பொதுவாக குளிர்காலம் துவங்கும், நவம்பர் மாதம் (கார்த்திகை மாதம்) இனப்பெருக்கத்துக்காக ஆண், பெண் நாய்கள் இணையும் காலம். இந்த தருணத்தில் நாய்களுக்கு வெறி நோய் அதிகம் ஏற்படும். இந்த நோய் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் அதற்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்தில் போட்டுக் கொண்டால், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் வெளியிலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாகப் பிடித்து இனப் பெருக்க கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.