மஞ்சளில் கல், மண் நீக்க ரூ.4.2 கோடியில் தானியங்கி இயந்திரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்க நடவடிக்கை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் மூட்டைக்கு 2 கிலோ கழிவு செய்வதாக புகார் தெரிவித்ததை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் மூட்டைக்கு 2 கிலோ கழிவு செய்வதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து கல், மண் நீக்க ரூ. 4.2 கோடி மதிப்பில் நவீன தானியங்கி இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கண்காணிப்பில் ஈரோடு மாவட்டத்தில் 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்கம்,  கோபி கூட்டுறவு விற்பனை சங்கம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய 4  மஞ்சள் சந்தைகள் ஈரோட்டில் இயங்கி வருகிறன்றன.
 மஞ்சள் சந்தையில் சாக்குப் பை, கல், மண் போன்றவை எடைக்கழிவு எனக் கூறி மூட்டைக்கு 2 கிலோ வரை கழிவு செய்வதாகவும், இதனால் குவிண்டாலுக்கு ரூ.200 வரை விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மஞ்சள் மூட்டை தைப்பதற்கான கூலியை வியாபாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும். ஆனால் விவசாயிகளிடம் வசூல் செய்யப்படுகிறது.  
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை உயராமல் ஒரு குறிப்பிட்ட விலையே விற்பனையாகிறது. இது குறித்து மஞ்சள் வியாபாரிகளிடம் கேட்டால், வட மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி நன்றாக உள்ளதால் இங்கு விற்பனையாகவில்லை எனக் கூறுகின்றனர். 
 ஆனால், இந்திய அளவில் மஞ்சள் தேவை இருக்கிறது. தேவை இருந்தும் விலை உயர்த்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இடைத்தரகர்களாகும். ஆன்லைன் மூலமாக ஏலம் விட்டாலும், இடைத் தரகர்கள் மஞ்சள் விலையை நிர்ணயிக்கின்றனர். இதனால் விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 இந்த நிலையில் மண்,கல், சாக்குப் பை எனக் கூறி 65 கிலோ மூட்டைக்கு 2 கிலோ வரை எடைக்கழிவு செய்யப்படுகிறது. இந்த எடைக் கழிவால் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.200 வரை நஷ்டமடைகின்றனர். எனவே, இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றனர்.
 இதுகுறித்து வேளாண் வணிகம், விற்பனைத் துறை துணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: 
ஈரோடு மாவட்ட விற்பனைக் குழுவின் கீழ் 15 வகையான விவசாய விளைப் பொருள்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விவசாயிகளிடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் முன்னிலையில் வியாபாரிகள் பொருள்களை ஏலம் எடுப்பதால் இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கிறது. மேலும்  வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் சென்றடைகிறது.
மேலும், ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இ-நாம்(தேசிய அளவிலான ஒருங்கிணைந்த சந்தை விற்பனை), இ-டிரேடிங் (மின்னணு முறை விற்பனை), இ-டெண்டரிங் (மின்னணு ஒப்பந்தம்), இ-டிரான்சாக்சன்(மின்னணு பண பரிவர்த்தனை) போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 
 மஞ்சள் மூட்டைக்கான எடைக்கழிவு பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பெருந்துறை ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.4.2 கோடி மதிப்பில் தானியங்கி  மற்றும் பகுப்பாய்வு இயந்திரம் தயாராகி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இப்பணி முடியும். 
அதன் பிறகு விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சள் மூட்டைகள் கல், மண் நீக்கி, பகுப்பாய்வு செய்து தற்போது 65 கிலோ மூட்டைக்கு பதிலாக 50 கிலோ மூட்டைகளாக பேக்கிங் செய்யப்படும். இதன் மூலம் எடைக்கழிவு பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com