கொப்பரைத் தேங்காய் விலை தொடர் சரிவு
By DIN | Published On : 18th May 2019 06:35 AM | Last Updated : 18th May 2019 06:36 AM | அ+அ அ- |

புது தேங்காய் வரத்து அதிகரிப்பாலும், தேங்காய் எண்ணெய் தேவைக் குறைவாலும் கொப்பரைத் தேங்காய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பா.மா.வெங்கடாசலம் கூறியதாவது:
தேசிய அளவில் ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் தேங்காய் எண்ணெய் தேவை அதிகரித்து ஜனவரி மாதம் வரை தொடரும். மார்ச் மாதம் முதல் தேவை குறையும்.
தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய் ஆகியவை எண்ணெய் பயன்பாடு மட்டுமின்றி மருந்து உற்பத்தி, புண்ணாக்கு தயாரிப்பு, பிற உணவுப் பண்ட கலப்புக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் கொப்பரைத் தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் தேவை இருக்கும். வரத்து அதிகரிக்கும்போது, தேவை குறைந்து விலை சரியும். ஈரோடு சந்தையில் கடந்தாண்டு ஏப்ரலில் ஒரு கிலோ ரூ.138 க்கும், மே மாதம் ரூ.128 க்கும், ஜூன்- ஜூலையில் ரூ.119 க்கும், ஜனவரியில் ரூ.126 க்கும் விற்பனையானது.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் விலை குறைந்து தற்போது ரூ.85 முதல் ரூ. 91 ஆக உள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் கொப்பரை வரத்த உள்ளது. வரத்து அதிகரிப்பால் இன்னும் 20 நாள்களில் கிலோ ரூ.80 க்கு விலை சரிய வாய்ப்புள்ளது. கொப்பரைத் தேங்காயை அதிக நாள்கள் இருப்பு வைக்க முடியாது என்பதால் விவசாயிகளுக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தார்.