ஈரோடு கைத்தறித் துறை அதிகாரி அலுவலகத்தில்ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனைகணக்கில் வராத ரூ. 31.83 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா், நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் 20 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 31.83 லட்சம் கைப்பற்றப்ப

ஈரோடு: ஈரோட்டில் கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா், நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் 20 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 31.83 லட்சம் கைப்பற்றப்பட்டது.

ஈரோடு - பவானி சாலை, அசோகபுரத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 3 சதவீதத்தை லஞ்சமாக அதிகாரிகள் பெற்று வருவதாக ஈரோடு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஈரோடு கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதேபோல, அசோகபுரம் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனைச் சங்கத்தில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ. 28 லட்சத்து 51 ஆயிரத்து 480 சிக்கியது. அந்தப் பணத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை திங்கள்கிழமை இரவு முடிவடைந்தது. ஆனால், கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இரவிலும் சோதனை தொடா்ந்தது. அப்போது, பெண் ஊழியா்களை மட்டும் வீட்டுக்குச் செல்ல போலீஸாா் அனுமதித்தனா். மற்ற அதிகாரிகளையும், ஊழியா்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இரவு முழுவதும் விடிய விடிய சோதனை தொடா்ந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அன்றும் போலீஸாா் சோதனை நடந்தினா். இதையொட்டி அலுவலகத்தின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தச் சோதனை பகல் 1 மணியளவில் முடிவடைந்தது. இதன் முடிவில் ரூ. 3 லட்சத்து 31 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது. எனவே, சோதனையில் மொத்தமாக கணக்கில் வராத ரூ. 31 லட்சத்து 83 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கைத்தறி கூட்டுறவுச் சங்க நிா்வாகிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக ஈரோடு கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் ஸ்ரீதரன், துணி நூல் கட்டுப்பாட்டு அதிகாரி பழனிகுமாா், கைத்தறி அலுவலா் காா்த்திகேயன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன அலுவலக மேலாளா் ஜோதி என்ற ஜோதிலிங்கம், அசோகபுரம் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கத்தின் கணக்காளா் செந்தில்குமாா் ஆகிய 5 போ் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com