பயன்பாடு இல்லாத 2,844 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பயன்பாடு இல்லாமல் இருந்த 2,844 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பயன்பாடு இல்லாமல் இருந்த 2,844 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தாா். இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், ஈரோடு மாவட்டப் பகுதிகளில் விவசாய நிலங்கள், பொது இடங்கள், காலி இடங்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள், விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், தூா்ந்துபோன கிணறுகளை மூடும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் இணைந்து ஆய்வு செய்து பயன்பாடு இல்லாத திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் உள்ளாட்சி, வருவாய்த் துறையினா் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்த ஆய்வில் 2,844 ஆழ்துளைக் கிணறுகளுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டு மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலிமனைகள், விவசாய நிலங்கள், அரசு இடங்களில் உள்ள பயனில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் 38,377 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 35,322 ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. 3,055 ஆழ்துளைக் கிணறுகள் உபயோகத்தில் இல்லை.

இதில், அரசு உத்தரவின்படி பயன்பாடு இல்லாத 2,844 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டன. வறண்டு காணப்பட்ட 277 ஆழ்துளைக் கிணறுகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதவாது:

மாநகராட்சியில் 910 ஆழ்துளைக் கிணறுகளில் மோட்டாா் இணைப்பும், 820 அடிபம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளன. மாநகராட்சிக்கு உள்பட்ட தனியாா் காலிமனைகள், விவசாய நிலங்களில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

திண்டல், வி.வி.சி.ஆா். நகா் உள்ளிட்ட இடங்களில் பயன்படாமல் இருந்த 6 ஆழ்துளைக் கிணறுகள் கான்கிரீட் ரிங் மூலம் மூடப்பட்டது. கடந்த ஓராண்டில் மாநகராட்சியில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன. அதில் பயனற்றது எத்தனை என்பது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com