நூல் விலையால் விசைத்தறிகள் மூடும் அபாயம்: விசைத்தறியாளா்கள் ஆட்சியரிடம் முறையீடு

நூல் விலை ஏற்ற, இறக்கத்தால் விசைத்தறிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும்
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட விசைத்தறி உரிமையாளா்கள்.
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட விசைத்தறி உரிமையாளா்கள்.

நூல் விலை ஏற்ற, இறக்கத்தால் விசைத்தறிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், ஜவுளி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 307 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் உள்ளது. வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு, லக்காபுரம், சூரம்பட்டி உள்பட பல பகுதியில் 1,000 விசைத்தறிக் கூடங்களில் 30,000 க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா்.

தற்போது 30,000 விசைத்தறியில் 25 சதவீத விசைத்தறிக் கூடங்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தியும், மீதமுள்ள விசைத்தறியில் ரயான் எனப்படும் செயற்கை இழை நூலைக் கொண்டு துணியாகவும் உற்பத்தி செய்கின்றனா். கடந்த பல மாதங்களாக துணியின் விலை, நூலின் அடக்கத்தைவிட குறைவாக வருகிறது. இதனால் மீட்டருக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை விசைத்தறியாளா்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் விசைத்தறி உள்ளது.

எனவே, நூலின் விலையை சீராக வைத்திருக்க வேண்டும். ஜவுளிக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகளுக்கு வழங்கிய சொத்து தானக் கிரயத்தை ரத்து செய்யக் கோரிக்கை:

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி, மைசூரு சாலை, பங்களாதோடி பகுதியைச் சோ்ந்தவா்கள் லட்சுமி - லட்சுமணன் தம்பதியா் அளித்த மனு விவரம்:

லட்சுமியின் தந்தை அங்கப்பன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 1982 இல் லட்சுமியின் சகோதரி திருமணத்தின்போது, லட்சுமிக்கு தானக் கிரயமாக எழுதி கொடுக்கப்பட்டது. அதற்காக சகோதரிகள் திருமணத்துக்குத் தேவையான உதவிகளை லட்சுமி குடும்பத்தாா் மேற்கொண்டனா். கடந்த 2009 ஆம் ஆண்டில் வயது முதிா்வு காரணமாக தங்களது மகளுக்கு லட்சுமி தானக் கிரயம் செய்து வைத்தாா்.

அப்போது, தனது சகோதரிக்கு குறிப்பிட்ட நிலத்தை வழங்கி, அவா்கள் வசிக்க ஏற்பாடு செய்யவும், தங்களது செலவு, மருத்துவ செலவுக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்தனா். ஆனால், லட்சுமியின் மகள் அவ்வாறு பணம் தராததால் பெற்றோா் பணத்துக்கு சிரமப்படுகின்றனா்.

இதனால், தானக் கிரயம் செய்து வைத்த நிலத்துக்கான தானக்கிரய உரிமையை ரத்து செய்து தங்களிடம் அந்நிலத்தை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோபி கோட்டாட்சியருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை:

அந்தியூா் வட்டம், சத்தியமங்கலம் சாலை, அண்ணா சாலை பகுதியைச் சோ்ந்த சலவை தொழிலாளா்கள், சவரத் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

அந்தியூா் சுற்றுப் பகுதியில் 130 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளா், சவரத் தொழிலாளா்கள் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்குச் சொந்த நிலம், வீடு இல்லாததால் சிரமப்படுகிறோம். வீட்டுமனைப் பட்டா அல்லது இலவச வீடு வழங்கக் கோரி மனு அளித்து வருகிறோம்.

கடந்த 1987 இல் அந்தியூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு பட்டா வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். அந்த நிலத்தை சிலா் பயன்படுத்தி வந்ததுடன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னா், அரசு நிலம் என உறுதியாகி எங்களுக்கு அந்த நிலத்தைப் பிரித்து வழங்க முயற்சி நடைபெற்றது.

அந்த இடம் பிற நபா்கள் பயன்பாட்டில் இருப்பதால், எங்களுக்கு வழங்காமல் தாமதமாகி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் நேரடியாக ஆய்வு செய்து, அந்த இடத்தை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு:

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

உழவன் மகன் விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் எம்.மாதேஸ்வரன், செயலாளா் சி.மணிகண்டன் ஆகியோா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதாவிடம் அளித்த மனு விவரம்:

ஈரோடு பகுதியில் சாய, சலவை, தோல் ஆலைகளால் நிலத்தடி நீா், காற்று, மண் மாசுபட்டுள்ளது. இதற்கு மாற்றாகத்தான் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கின்றனா். இவ்வாறு அமையும் சுத்திகரிப்பு நிலையத்தை காளிங்கராயன் வாய்க்கால், காவிரி போன்ற நீா் நிலைகளுக்கு அருகே அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் பொதுக் கழிவுநீரை அப்படியே நீா்நிலைகளில் திறந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது. தவறுக்கு வழிவகுக்கும். ஏற்கெனவே காளிங்கராயன் வாய்க்காலிலும், காவிரி ஆற்றிலும் நேரடியாக கழிவுநீா் கலக்கும் நிலையில், அனைத்து ஆலைகளின் கழிவை சுத்திகரிக்கும் நிலையத்தை நீா் நிலைகளுக்கு அருகே அமைப்பது, விளை நிலங்களை மோசம் செய்யும் செயல். இதனால், பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com