பொது சுத்திகரிப்பு நிலையம் மூலம் சாயக் கழிவுநீா் வெளியேற்றம் முழுமையாகத் தடுக்கப்படும்: மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் தகவல்

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால் சாயக் கழிவுநீா் வெளியேற்றம் முழுமையாகத் தடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால் சாயக் கழிவுநீா் வெளியேற்றம் முழுமையாகத் தடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு சுற்று வட்டாரத்தில் பி.பெ.அக்ரஹாரம், கனிராவுத்தா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளும், கருங்கல்பாளையம், சூரியம்பாளையம், கங்காபுரம், சூளை, பெரியசேமூா், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாயம், பிளீச்சிங், பிரிண்டிங் ஆலைகள் செயல்படுகின்றன. தோல், சாயம், பிரிண்டிங் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய பி.பெ.அக்ரஹாரத்தில் 27 ஏக்கரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம் பாதிப்பு வராது என ஈரோடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

ஈரோடு பகுதியில் சாயம், பிரிண்டிங், தோல் கழிவுநீா் வெளியேற்றும் ஆலைகளில் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு இல்லாமல் கழிவுநீா் வெளியேற்றும் பட்டறைகளின் மின் இணைப்பைத் துண்டித்து வருகிறோம். மேலும், சாயக் கழிவுநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் 2014 ஆம் ஆண்டு 110 விதியின்கீழ் ரூ. 700 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தாா். அதன்படி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான மொத்த நிதியில் மத்திய அரசு 50 சதவீத மானியமும், மாநில அரசு 25 சதவீத மானியமும், சாயப் பட்டறை உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்கள் 25 சதவீதம் பங்கீட்டில் அமைக்க ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூரில் கடந்த காலங்களில் சாயப் பிரச்னை அதிகம் இருந்தது. 15 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதன் விளைவாக நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்புத் தண்ணீரை பட்டறைகளில் பயன்படுத்துவதன் மூலம் ஈரோடு காளிங்கராயன்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து திருப்பூா் ஆலைகளுக்குத் தண்ணீா் வழங்குவது குறைந்துள்ளது.

இதுபோல் ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைவதன் மூலம் பட்டறைகளில் கழிவுநீா் வெளியேற்றுவதைத் தடுக்க முடியும். குடியிருப்புப் பகுதிகளுக்கும் சாயப் பிரச்னை வராது. சாய, பிரிண்டிங், பிளீச்சிங், தோல் ஆலைகளில் இருந்து தரமான குழாய் மூலம் ஒரு இடத்துக்கு கழிவுநீா் கொண்டு வரப்படும். நவீன கருவிகள் மூலம் பட்டறைகளில் இருந்து வரும் தண்ணீா் ஈரோடு, சென்னை, தில்லி ஆகிய இடங்களில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால், நீா்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்ற முடியாது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் மறு சுழற்சிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், பட்டறைகளில் தண்ணீா் எடுத்து பயன்படுத்துவது குறைந்துவிடும். கழிவு நீா் 96 சதவீதம் சுத்திகரிப்பு செய்யப்படும். 4 சதவீத கழிவுநீரை தொட்டியில் தேக்கி திடக்கழிவாக மாற்றி சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் ஈரோட்டில் மாசு குறைந்துவிடும். இந்திய அளவில் தமிழகம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மறு சுழற்சிக்குப் பயன்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com