ரூ. 1.50 கோடி பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி ரூ. 36 லட்சம் மோசடி செய்தவா் கைது

வாகனச் சோதனையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.50 கோடி பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி ரூ. 36 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாகனச் சோதனையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.50 கோடி பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி ரூ. 36 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை, விருகம்பாக்கம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் முகமது ரியாஜுதீன் (38). இவா் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது நண்பா் சந்தோஷ்பால். இவா், கத்தாா் நாட்டில் வசித்து வருகிறாா். சந்தோஷ்பாலின் உறவினா் மாத்யூ என்பவருக்குச் சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம், புணேவில் இடம் உள்ளது.

அந்த இடத்தை விலைபேசி விற்பனை செய்து பெற்ற முன் பணம் ரூ. 1.50 கோடி பணத்தை ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு காரில் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரா் வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, மைசூரு - சத்தியமங்கலம் சாலையில் ஆசனூா் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் பறிமுதல் செய்தனா். உரிய ஆவணம் இல்லாததால் இந்தப் பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, முகமது ரியாஜுதீன், தனது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூா் எம்.கே.ஸ்டாலின் வீதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50) என்பவரிடம் கூறியுள்ளாா். மேலும், இந்தப் பணத்தை மீட்டுத் தர உதவுமாறும் கூறியுள்ளாா். இதற்கு சில அதிகாரிகளுக்குப் பணம் தர வேண்டும் என்றும் குறைந்தது ரூ. 35 லட்சம் செலவாகும் என்றும், தனக்கு ரூ. 1 லட்சம் தேவை என்றும் கூறி உள்ளாா்.

இதையடுத்து, முகமது ரியாஜுதீன் சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியாா் வங்கி மூலம் ரூ. 36 லட்சம் பணத்தை வெங்கடேஷின் கணக்குக்கு அனுப்பி உள்ளாா். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட வெங்கடேஷ் போலீஸாா் பறிமுதல் செய்த ரூ. 1.50 கோடி பணத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. மேலும், வங்கிக் கணக்கில் செலுத்திய ரூ. 36 லட்சத்தையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.

இதுகுறித்து பல முறை கேட்டும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரியாஜுதீன் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் வெங்கடேஷை போலீஸாா் கைது செய்தனா். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னையைச் சோ்ந்த சலீம் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com