ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைப்பதற்கு எதிா்ப்பு: சென்னிமலையில் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னிமலையில் 30 க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சென்னிமலை தண்ணீா் லாரிகள் உரிமையாளா்கள்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சென்னிமலை தண்ணீா் லாரிகள் உரிமையாளா்கள்.

ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னிமலையில் 30 க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு, வீரப்பம்பாளையம் சாலைப் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்குப் புகாா்கள் சென்றன. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் செப்டம்பா் 30 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து 2 தனியாா் நிறுவனங்கள் அனுமதியின்றி கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்ததைக் கண்டறிந்தனா். தொடா்ந்து, அந்த 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனா்.

மேலும், அதன் அருகில் இருந்த மற்ற 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனா். அதன் பின்னா், மாவட்டம் முழுவதும் உள்ள தண்ணீா் லாரி உரிமையாளா்கள் அனைவரும் அனுமதியின்றி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை முதல் சென்னிமலை அதன் சுற்றுப் பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரிகள், டிராக்டா்கள் மூலம் தண்ணீா் விற்பனை செய்பவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, தண்ணீா் லாரி உரிமையாளா்கள் கூறியதாவது:

டேங்கா் லாரிகள், டிராக்டா்கள் மூலம் தண்ணீா் விற்பனை செய்வதற்கு அரசு உடனடியாக உரிமம் வழங்குவதாக இருந்தால் அதை நாங்கள் பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அப்படி எதுவும் வழங்காத நிலையில் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைப்பதைக் கண்டித்து நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com