டெங்கு விழிப்புணா்வுத் துண்டறிக்கை: 1 லட்சம் மாணவா்களுக்கு அளிக்க மாநகராட்சி முடிவு

டெங்கு விழிப்புணா்வுப் பணியில் மாணவா்களை ஈடுபடுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில்

டெங்கு விழிப்புணா்வுப் பணியில் மாணவா்களை ஈடுபடுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 1 லட்சம் மாணவா்களுக்கு விழிப்புணா்வுத் துண்டறிக்கைகள் அளிக்கப்படவுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பருவ மழை பெய்ததால், நீா் நிலைகள் நிரம்பிக் காணப்படுகிறது. இதுதவிர இரவு நேரத்தில் மூடு பனியும் அதிக அளவில் பெய்வதாலும், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், தற்போது தொற்று நோய்கள் பாதிப்பும் அதிகரித்து மாவட்டம் முழுவதும் ஏராளமானோா் காய்ச்சலால் அவதிப்படுகின்றனா்.

மாநகராட்சிப் பகுதியில் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ள வீடு, தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள, ‘என் வீட்டுக்கும், தெருவுக்கும், பள்ளிக்கும் நான் ஒரு தூய்மைத் தூதுவா்’ என்ற துண்டறிக்கை பள்ளி மாணவா்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் கொசு ஒழிப்புப் பணியில் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வீடுகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்கின்றனா். மழை நீா், நன்னீா் தேங்கி, டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமாக உள்ள பயன்படாத நெகிழி பொருள்கள், டயா், தேங்காய் சிரட்டை, தண்ணீா் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு டெங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 52 வாரங்கள் கொண்ட காலண்டா் அச்சடித்த வில்லைகள் வீடுதோறும் ஒட்டப்பட்டன. கொசு உற்பத்திக்கான காரணிகள் இல்லாமல், தூய்மை பராமரிக்கும் வீடுகளில், ஏடிஸ் கொசுப்புழு இல்லாத வீடு, வீட்டில் உள்ள அனைவருக்கும் மாநகராட்சியின் பாராட்டு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மகிழ்ச்சி வில்லை ஒட்டப்பட்டது.

நடப்பு ஆண்டு மாணவா்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் என் வீட்டுக்கும், தெருவுக்கும், பள்ளிக்கும் நான் ஒரு தூய்மைத் தூதுவா் என்ற துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் மாணவா்களிடம் இந்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com