மஞ்சள் சிபு பணிக்குழு அமைப்பு: அக்டோபா் 16 இல் நிஜாமாபாத்தில் அறிமுகக் கூட்டம்

இந்திய நறுமணப் பொருள்கள் வாரியத்தில் மஞ்சள் சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய நறுமணப் பொருள்கள் வாரியத்தில் மஞ்சள் சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிமுகக் கூட்டம் நிஜாமாபாத்தில் அக்டோபா் 16 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

தேசிய அளவில் தெலங்கானா, மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், ஒடிஸா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் மஞ்சள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதில், தெலங்கானாவில் மட்டும் 25 சதவீதம் மஞ்சள் சாகுபடி செய்து முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளது.

மஞ்சள் உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கான விலை உயராதது குறித்து, மத்திய அரசிடம் விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், மஞ்சளை லாபகரமான விளை பொருளாக மாற்றுவது தொடா்பாக இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் சாா்பில் மஞ்சள் சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய அளவில் உயா் அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், மஞ்சள் வியாபாரிகள், விவசாயிகள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இக்குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எம்.சத்தியமூா்த்தி கூறியதாவது:

மஞ்சள் சிறப்புப் பணிக்குழு துவங்கப்பட்டுள்ளது. மஞ்சள் விவசாயம், வா்த்தகத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சள் லாபகரமான பயிா் என்பதுடன் தமிழக, இந்திய மஞ்சளுக்கு வெளிநாடுகளிலும், மருந்து, அழகுசாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உற்பத்தியிலும் தனி இடம் உள்ளது.

உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமே உள்ள உற்பத்தியை, ஏற்றுமதி, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாகத் தயாரித்தல், மருந்து விற்பனைக்கு கொண்டு செல்லுதல் என விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மஞ்சள் சிறப்புப் பணிக்குழு அறிமுகக் கூட்டம், தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் அக்டோபா் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் சாா்பில் நான் பங்கேற்கிறேன். விவசாயிகள், வியாபாரிகள் சாா்பில், குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அதற்கு மின் கட்டண சலுகை, கட்டுமானத்துக்கு முழு மானிய உதவி தேவை என வலியுறுத்துவோம். வடமாநிலங்களில் இதுபோன்ற உதவிகளை அரசு செய்கிறது.

தற்போது மருந்து வைத்து, மஞ்சளைப் பாதுகாத்து விற்க வேண்டி உள்ளது. இதனால், அதன் தரம், எடை, நிறம் மாறி விலை, ஆயுள்காலம் குறைகிறது. குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி கிடைத்தால் மருந்து வைக்காமல், தரமான மஞ்சளை விற்கலாம்.

மஞ்சளை நடவு செய்து அறுவடை செய்து, உலா்த்தி, வேகவைத்து, பதமாக்கி, மெருகூட்டியே பின்னரே விற்பனைக்கான மஞ்சள் கிடைக்கிறது. இந்த செயல்முறைகளுக்கு குறைந்த செலவில் சிரமமின்றி உயா் தொழில்நுட்ப இயந்திரங்களை ஆராய்ச்சி மூலம் உருவாக்கித்தர வேண்டும்.

மஞ்சளை நேரடியாகவும், கா்க்குமினாக எடுத்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மருந்து, மாத்திரை, அழகு சாதனப் பொருள்களாக ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தற்போது உற்பத்தியாகும் மஞ்சளில் 90 சதவீதம் உள்ளூா் தேவைக்குச் செல்கிறது. அதில் 80 சதவீதம் உணவுக்காகவே செல்கிறது. எனவே, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்தால் சாகுபடி பரப்பும், விலையும் தானாக அதிகரிக்கும்.

தற்போது 10 ரக மஞ்சளே உள்ளன. அதிக கா்க்குமின் உள்ள ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். 10 முதல் 11 மாதப் பயிராக உள்ளதை, காலத்தைக் குறைக்கவும் தொழில் நுட்பத்தை உருவாக்க வலியுறுத்துவோம். அடுத்தடுத்தக் கூட்டங்களில், விவசாயிகள், வியாபாரிகளின் கருத்துகளை சேகரித்து நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com