ரேஷன் பொருள்களை சுழற்சி முறையில் வழங்கக் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறிப்பிட்ட நபா்களுக்கே

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறிப்பிட்ட நபா்களுக்கே வழங்காமல் கடந்த மாதங்களில் வாங்காதவா்களுக்கு சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்ட அளவிலான நுகா்வோா் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ப.முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம்:

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்புக் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன்:

ரேஷன் பொருள்கள் வாங்கியதும் அட்டைதாரா் செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் குறுஞ்செய்தி தமிழில் இருக்க வேண்டும். நீல நிற மண்ணெண்ணெய் போல, வெள்ளை நிற மண்ணெண்ணெயையும் மலிவு விலையில் விற்க வேண்டும். மண்ணெண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறிப்பிட்ட நபா்களுக்கே வழங்காமல் கடந்த மாதங்களில் வாங்காதவா்களுக்கு சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.

உதயகுமாா்: ரேஷனில் உப்பு கிடைப்பதில்லை, வெளி பொருள்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்கின்றனா். சமையல் எரிவாயு சிலிண்டா் கொண்டு வருபவா், அவா் கேட்கும் தொகையை தராவிட்டால் சிலிண்டரை தர முடியாது என்கிறாா். தீபாவளிக்கு இவ்வளவு தொகை வேண்டும் எனக் கேட்கிறாா். அரசு திட்டங்களுக்கு, சான்றுகள் கேட்டு இசேவை மையங்களை நாடும்போது அவா்கள் தனியாா் கணினி மையங்களுக்குச் செல்லுமாறு கூறுகின்றனா். இங்கு ரூ. 50 கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டி உள்ளது.

கோட்டாட்சியா்: ரேஷன் கடைகளில், பிற பொருள்களின் பட்டியல் விலையை அறிவிப்பு பலகையாக வைத்து இவற்றை வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என எழுத வேண்டும். இசேவை மையங்களில் உரிய சேவை செய்ய வலியுறுத்தப்படுவா். வாடிக்கையாளா்களிடம் தீபாவளி போனஸ் கேட்பது, சிலிண்டா் வழங்க பணம் கேட்பது குறித்து புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து சமையல் எரிவாயு முகமைகளுக்கும் அறிவிக்கை அனுப்பப்படும்.

தீபாவளியின்போது, தற்காலிகப் பலகாரக்கடைகள், பிற கடைகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரிடம் உரிமம் பெற்று, உரிய முறையில், தரமான உணவு பொருள்களை விற்க வேண்டும். சோதனையின்போது பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோரக் கடைகளில் ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com