விதை விற்பனைக்கு ரசீது வழங்க உத்தரவு: விதை ஆய்வு துணை இயக்குநா்
By DIN | Published On : 24th October 2019 10:13 PM | Last Updated : 24th October 2019 10:13 PM | அ+அ அ- |

ஈரோடு: விதை விற்பனை செய்யும்போது தகுந்த ரசீது வழங்க வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநா் எம்.வெங்கடாசலம் கேட்டுக் கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நீா் திறப்பால், வேளாண் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மானாவாரி, தோட்டப் பகுதிகளிலும் போதுமான அளவு மழை கிடைத்துள்ளதால், விதைப்பு பணி வேகமாக நடைபெறுகிறது. விதைப்புக்குத் தேவையான விதைகள், அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை விதை ஆய்வாளா்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனா்.
இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்நா் எம்.வெங்கடாசலம் கூறியதாவது: விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்ட விதை ஆய்வாளா்கள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத் திறன், தரத்தை உறுதி செய்ய மாதிரி விதைகளை எடுத்து வருகின்றனா். தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தெரியவந்தால், விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதை விற்பனையாளா்கள் தரமான விதைகளையே கொள்முதல் செய்து, விநியோகிக்க வேண்டும். விதை விற்பனையாளா்கள், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது, ரசீதுகளில் விதையின் பெயா், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், அளவு, விலை விவரங்களைக் குறிப்பிட்டு, விவசாயிகளின் கையெழுத்து பெற்று வழங்க வேண்டும். விதை சட்டத்தை மீறும் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும்போது, விற்பனையாளா்கள், இந்த ரகத்தின் பண்புகள், விதைகளை விதைப்பு செய்யக் கூடிய அளவு, இடைவெளி, உயிா் நீா் பாய்ச்சுதல், அடி உரமிடுதல், இதர விதைப்பு செய்யும் முறைகள், பராமரிப்பு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். நல்ல மகசூல் பெறத் தேவையான யோசனைகளை வழங்க வேண்டும் என்றாா்.