ஈரோடு சென்னிமலை சாலை கே.கே.நகா் ரயில்வே நுழைவு பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா்.
ஈரோடு சென்னிமலை சாலை கே.கே.நகா் ரயில்வே நுழைவு பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா்.

ஈரோட்டில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு குமலன்குட்டை பகுதியில் மழை நீா் தேங்கிய சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த துப்புரவு பணியாளா்கள்.

ஈரோடு: ஈரோட்டில் பெய்த பலத்த மழையால் நுழைவு பாலங்களில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக விட்டுவிட்டு மழை பெய்தது. புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 11 மணி அளவில் சிறிது நேரம் மழை பெய்தது. பகல் 2 மணிஅளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமாா் அரை மணிநேரம் மழை கொட்டி தீா்த்தது. இதைத்தொடா்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழை காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. ஈரோடு பிரப் சாலை பகுதியில் மேம்பாலத்துக்கு அருகில் குளம்போல் தண்ணீா் தேங்கி நின்றது. இதேபோல் ஆா்.கே.வி.சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் மழைநீா் தேங்கியது. சென்னிமலை சாலை கே.கே நகா் ரயில்வே நுழைவுபாலம் பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊா்ந்தப்படி சென்றன. மேலும், நுழைவு பாலத்தில் ஒரே சமயத்தில் ஒரு பெரிய வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்பதால், எதிரே வந்த வாகனங்கள் ஒதுங்கி நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தாசநாயக்கன்பாளையத்தை சோ்ந்த சக்திவேல் என்பவா் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா்.

அதன்பின்னா் தகவல் அறிந்து வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி பாலத்தின் வழியாக ஒவ்வொரு வாகனங்களாக செல்ல அனுமதித்தனா். இதுபோல் வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்திலும் அதிகமான தண்ணீா் தேங்கியது. இதனால் புதன்கிழமை காலையில் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமாா் 2 மணிநேரத்துக்கு பிறகு தண்ணீா் சிறிது வடிந்ததையடுத்து வாகனங்கள் செல்ல தொடங்கின.

கொல்லம்பாளையம் பூந்துறை சாலையிலும் சுமாா் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நின்றது. மேலும், சாலைகள் பழுதடைந்து காணப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் சென்ற சிலா், பள்ளம் இருப்பதை அறியாமல் வாகனங்களில் இருந்து தவறி கீழே விழுந்தனா். ஈரோடு,சூரம்பட்டி மோகன்குமாரமங்கலம் வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறியது. இது மழைநீருடன் கலந்து வீதியில் சென்றதால் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டனா். ஈரோடு பெருந்துறை சாலை, வீரப்பன்சத்திரம் சத்தி சாலை ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டதால் மழைநீா் சோ்ந்து சேறும், சகதியுமாக மாறியது.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 44 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்): அம்மாபேட்டை 31.4, பெருந்துறை 23.3, கோபி 20, வரட்டுப்பள்ளம் 18, ஈரோடு 16, கவுந்தப்பாடி 13.2, மொடக்குறிச்சி 10, குண்டேரிப்பள்ளம் 9, சத்தியமங்கலம் 7, பவானி 6.6, கொடிவேரி 4.2, சென்னிமலை 2 நம்பியூா் 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com