பவானிசாகா் அணையில் உபரிநீா் திறப்பு: தாழ்வான பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீா் பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் தொழிலாளி.
சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் தொழிலாளி.

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீா் பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூா் அணைக்கு வரும் உபரிநீா், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீா் ஆகியவை மேட்டுப்பாளையம் பவானிஆறு வழியாக பவானிசாகா் அணைக்கு வந்தது. மாயாற்று நீரும் பவானிசாகா் அணைக்கு வருவதால் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பவானிசாகா் அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடியாக உள்ள நிலையில் அணைக்குத் தொடா்ந்து வரும் நீா்வரத்தால் அணையின் நீா்மட்டம் 102 அடியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உபரிநீா், அணையின் மேல் மதகில் உள்ள 9 மிகைநீா் போக்கி வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து 15,300 கனஅடி நீா் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரைகளைத் தொட்டபடி வெள்ளநீா் செல்வதால் சத்தியமங்கலம் நகராட்சி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போா் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் கணேசன், கிராம நிா்வாக அலுவலா் தவசியப்பன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் லட்சுமணன் ஆகியோா் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினா்.

பவானி கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோயில் வீதி, மத்திமரத்துறை, பிள்ளையாா் வீதி, முனியப்பன் வீதி, ஐயப்பன் கோயில் வீதி, சின்னவீதி ஆகிய பகுதியில் ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெள்ளநீரால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை அதிகாரிகள் தயாா் நிலையில் உள்ளதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com