தமிழ் மண்ணைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

தமிழ் மண்ணைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்

தமிழ் மண்ணைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.      காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக "காவேரி கூக்குரல்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் அந்த இயக்கத்தில் இரு மாநில அரசுகள், விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து 11 ஆம் தேதி தமிழகம் வந்த அவர் கோபி அருகே மேவானி கிராமத்தில் விவசாயிகளிடையே வியாழக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் நம் தமிழ் மண்ணில் 12,000 ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. பல தலைமுறையினர் வளமாகவும், செழிப்பாகவும் வாழ்ந்துள்ளனர். முக்கியமாக, தொடர்ந்து மண்ணை வளமாகக் காப்பாற்றி வந்தனர். ஆனால், கடந்த இரண்டு தலைமுறைகளில் மண்ணை வளமற்றதாக மாற்றிவிட்டோம். மண்ணில் எந்தச் சத்தும் இல்லாமல் ஆக்கிவிட்டோம். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 42 சதவீத விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன. 
மண்ணில் இலை, தழைகள், மாட்டுச் சாணங்களைப் போடாமல் வெறும் உப்பை(செயற்கை உரம்) மட்டுமே கொட்டினால் மண் எப்படி வளமாக இருக்கும்? மண்ணில் சத்து இருந்தால்தான் அதில் விளையும் உணவில் சத்து இருக்கும். சத்தான உணவை உண்டால்தான் உடலும் சத்தாக இருக்கும். 
விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை விவசாயி சங்கத் தலைவர்கள் ஒரே குரலில் சத்தமாக அரசாங்கங்களுக்குச் சொல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தான் நம் தமிழ் மண்ணை காக்க முடியும் என்றார். 
இந்நிகழ்ச்சியில், ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தால் பயன்பெற்ற ஏராளமான விவசாயிகள் தங்களின் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் பிறகு மாலையில் குமாரபாளையம், பவானி, சித்தோடு வழியாக ஈரோடு வந்த அவருக்கு அரசு மருத்துவமனை அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர் கே.சுதாகர் மாலை அணிவித்து வரவேற்றார்.
இதில், ஈஷா யோக மைய தொண்டர்கள் பங்கேற்றனர். சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகனப் பேரணியானது, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை செல்கிறது. நிறைவு நிகழ்ச்சி கோவையில் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com