பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி: மாநிலப் போட்டிக்கு ஈரோடு அணி தேர்வு

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் பள்ளிகளுக்கு  இடையே நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ்  டி20 சாம்பியன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு சி.எஸ். அகாதெமி


மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் பள்ளிகளுக்கு  இடையே நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ்  டி20 சாம்பியன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு சி.எஸ். அகாதெமி மாநில போட்டிக்குத் தகுதி பெற்றது.
மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், 14 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையிலான அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.     
இதில், ஈரோடு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. போட்டியில், ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்ட அணிகள் விளையாடின.
இதில், நீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற உதகை லெய்ட்லா மெமோரியல் பள்ளி அணியும், ஈரோடு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சி.எஸ். அகாதெமி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆர்.சங்கரராமநாதன் தொடங்கிவைத்தார். மாவட்டப் பொருளாளர் அருண் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இதில், டாஸ் வென்று முதலிடம் பெற்ற ஈரோடு சி.எஸ். அகாதெமி அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தனர். இதில், பிரணவ் 46 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விளையாடிய உதகை அணியினர் 18.2 ஓவர்கள் முடிவில் 94 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியைத் தழுவினர். வெற்றி பெற்ற ஈரோடு சி.எஸ். அகாதெமி அணியினர் திருநெல்வேலியில் ஜனவரி மாதம் நடைபெறும் லீக், நாக்அவுட் போட்டிக்குத் தகுதி பெற்றனர். தொடர்ந்து, பரிசுகளும், கோப்பையும் வழங்கப்பட்டன. 
மேலும், சென்னையில் நடைபெறும் போட்டியில் முதலாவது, இரண்டாமிடம் பெறும் அணிகள் மாவட்டங்கள்தோறும் வெற்றி பெறும் அணிகள் என 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு லீக், நாக்-அவுட் முறையில் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெறும். 
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன் கோப்பை பரிசாக வழங்கப்படும்.
மேலும், சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆட்டநாயகன், ஆல்ரவுண்டர்களுக்கும் சிறப்பு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
விழாவில், மாவட்ட கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் மோகன்தாஸ், ஜூனியர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com