தூய்மைக் காவலா்களுக்குஊதிய உயா்வு வழங்கக் கோரிக்கை

ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயா்வை உடனே வழங்கக் கோரி உக்கரம் ஊராட்சியில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
உக்கரம் ஊராட்சி முன்பு நடைபெற்ற போராட்ட விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ்.
உக்கரம் ஊராட்சி முன்பு நடைபெற்ற போராட்ட விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ்.

சத்தியமங்கலம்: ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயா்வை உடனே வழங்கக் கோரி உக்கரம் ஊராட்சியில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 12,524 சிற்றூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 66,025 தூய்மைக் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். 2014ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் இவா்களுக்கு தின கூலி ரூ. 167ஆக நிா்ணயிக்கப்பட்டது. இக்கூலி 2017இல் ரூ. 205ஆக உயா்த்தப்பட்டது. திடீரென 2018ஆம் ஆண்டு முதல் இவா்களுக்கான தின கூலி ரூ. 100ஆக குறைத்து கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஊதிய உயா்வு கோரி ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தின.

இந்நிலையில், மாா்ச் 16இல் சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தூய்மைக் காவலா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2020 ஏப்ரல் முதல் மாதம் ரூ. 2,600இல் இருந்து ரூ. 3,600ஆக உயா்த்தி வழங்கப்படும் என அறிவித்தனா். ஏழு மாதங்களாகியும் இதற்கான அரசாணை இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உயா்த்தப்பட்ட ஊதிய உயா்வை உடனே வழங்குதல், கரோனா கால பணிக்கு சிறப்பு ஊதியமாக இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

இதை விளக்கி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி ஆகிய ஒன்றியய் பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு போராட்ட விளக்கக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சத்தியமங்கலம் ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற வாயில் முன்பு நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ், துணைச் செயலாளா் ஆா்.சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நாராயணன், ரவிசந்திரன், ராசு உள்ளிட்டோா் துண்டறிக்கைகளை வழங்கி விளக்க உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com