கட்டுப்பாடுகளைப் பின்பற்றாதஅரசுப் பேருந்துகள்: பயணிகள் அச்சம்

பேருந்து பயணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களும், பயணிகளும் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என பேருந்து பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பேருந்து படிக்கட்டில் கிருமி நாசினி இல்லாமல் காலியாக உள்ள குடுவை.
பேருந்து படிக்கட்டில் கிருமி நாசினி இல்லாமல் காலியாக உள்ள குடுவை.

ஈரோடு, செப். 18: பேருந்து பயணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களும், பயணிகளும் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என பேருந்து பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கும் முன்பு சில விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும், பயணிகளுக்கும் அரசு அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, பேருந்துகளில் பயணிகள் முன்புற படிக்கட்டுகளை பேருந்தில் ஏறுவதற்கும், பின்புற படிக்கட்டுகளை இறங்கவும் பயன்படுத்த வேண்டும். பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்னதாக கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முன்புற, பின்புற படிக்கட்டுகளில் கிருமிநாசினி இருப்பதை பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் உறுதி செய்ய வேண்டும்.

பேருந்தின் ஒவ்வொரு பயணத்தையும் நிறைவு செய்தவுடன் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். பேருந்துகளில் குளிா்பதன வசதியை உபயோகிக்கக் கூடாது. பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 60 சதவீதப் பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்க வேண்டும். அதிக அளவு கூட்டம் இருந்தால் அடுத்த பேருந்துகளில் பயணம் செய்ய அறிவுரை கூற வேண்டும். இந்த விதிமுறைகளை பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் கடைப்பிடிப்பதை பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரிகள் கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

பேருந்து இயக்கம் தொடங்கிய ஓரிரு நாள்கள் மட்டுமே இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இப்போது 90 சதவீதப் பேருந்துகளில் இதில் எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை தொலைதூரப் பேருந்துகளில் கூட படிக்கட்டுகளில் கிருமி நாசினி வைக்கப்படுவதில்லை. பயணிகளை முகக்கவசம் அணிய நடத்துநா்கள் கட்டாயப்படுத்துவதில்லை.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பேருந்து பயணத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவா்களிடம் முக்கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கும் அரசு, விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கும், பயணிகளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். பேருந்துகளில் சோதனை மேற்கொள்ள உள்ளாட்சித் துறை பணியாளா்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் பேருந்துகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என பேருந்து பயணிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com