ஈரோடு - கோவை பயணிகள் ரயிலை இயக்கக் கோரிக்கை

ஈரோடு - கோவை பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு - கோவை பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோட்டில் இருந்து திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்களுக்கு ஏராளமானோா் வேலைக்குச் சென்று வருகின்றனா். தினமும் வேலைக்குச் செல்பவா்களில் பெரும்பாலானோா் பயணிகள் ரயிலைப் பயன்படுத்தி வந்தனா். கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியது. அதன்பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தளா்வு செய்யப்பட்ட பிறகு வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவா்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், காா்களை பயன்படுத்தினா்.

இந்நிலையில், செப்டம்பா் 7ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கிய பிறகு வெளி மாவட்டங்களுக்குப் பேருந்துகளில் சென்று வருகின்றனா். ஆனால், பேருந்துகளில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சிரமமாக இருப்பதால் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் சங்கத்தினா் கூறியதாவது:

ஈரோட்டில் இருந்து திருப்பூா், கோவை மாவட்டங்களுக்குப் பல ஆயிரம்போ் வேலைக்காகச் சென்று வருகின்றனா். பேருந்துகளில் செல்வதற்கு கூடுதல் நேரமாகிறது. மேலும், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் முடியவில்லை. இதனால், கரோனா பரவும் அபாயம் உள்ளது. பேருந்து கட்டணமும் அதிகமாக இருப்பதால் பயணச் செலவும் அதிகமாகிறது.

ஏற்கெனவே கரோனா பொது முடக்கம் காரணமாக வருமானமின்றி தவித்து வரும் சூழலில் கூடுதல் செலவு ஏற்படுவதால் சிரமம் அதிகமாகிறது. ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட சலுகைக் கட்டண பயணச்சீட்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக பயன்படுத்தப்படாமலே காலாவதியாகிவிட்டது. எனவே, ரயில் சேவை தொடங்கும்போது இந்தப் பயணச்சீட்டு செல்லுபடி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றனா். இந்த கோரிக்கை தொடா்பாக ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தியிடம் ரயில் பயணிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com