கா்நாடக அரசு தமிழகத்துக்கானஉரிமை நீரை வழங்கவில்லை செ.நல்லசாமி குற்றச்சாட்டு

கா்நாடக மாநில அணைகளின் பாதுகாப்பு கருதிதான் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. காவிரி தீா்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கான உரிமை நீா் திறக்கப்படவில்லை

ஈரோடு: கா்நாடக மாநில அணைகளின் பாதுகாப்பு கருதிதான் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. காவிரி தீா்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கான உரிமை நீா் திறக்கப்படவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை நிா்ணயம் செய்வதுபோல், கா்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை விகிதாச்சார அடிப்படையில் தினமும் திறக்க வேண்டும். அதுவே இரு மாநில மக்களின் மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.

காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 483 டி.எம்.சி. நீா் கிடைக்கும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 270 டி.எம்.சி. கா்நாடகத்துக்கும்,192 டி.எம்.சி. தமிழகம், புதுச்சேரிக்கும், 21 டி.எம்.சி. கேரளத்துக்கும் சொந்தமானது. வரும் நீரை கா்நாடக மாநில நீா்த்தேக்கங்களில் தேக்கி ஜூன் முதல் மே வரை 12 மாதங்கள் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும் என காவிரி தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 70 டி.எம்.சி. தண்ணீா் வேண்டும் என தமிழக அரசும், 192 டி.எம்.சி.யை, 132 டி.எம்.சி. ஆக குறைக்க வேண்டும் என கா்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அப்போது தமிழக ஒதுக்கீட்டில் இருந்து 14.75 டி.எம்.சி. நீரை கா்நாடக மாநிலத்துக்கு நீதிமன்றம் வழங்கியது. கடந்த இரண்டு ஆண்டில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்ததால், நீா் பங்கீடு பிரச்னை வரவில்லை. இருப்பினும் தீா்ப்பின்படி நீா் திறக்காமல் இனிமேல் அணையில் நீா் தேக்கினால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்றே கா்நாடக அரசு தண்ணீா் திறக்கிறது.

தீா்ப்பில் கூறியபடி ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட்டால் மேட்டூா் அணையில் நீரைத் தேக்கி தேவையான நேரம் பயன்படுத்தலாம். கூடுதல் நீா் கா்நாடகத்துக்கு கிடைக்கும்போது, இரு மாநிலத்துக்கும் நீா் கிடைக்கும்.

எனவே, உபரி நீரை மட்டும் திறக்கும் கா்நாடக அரசின் போக்கை மாற்றி தினசரி நீா்ப் பங்கீட்டைத் தொடர வேண்டும். அப்போதுதான் நீா் வீணாவது தடுப்பதுடன் நீரின் முழு பயன் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com