வாகன அனுமதிச் சான்று பெற குவியும் மக்கள்: வட்டாட்சியா் அலுவலகங்களில் வழங்கக் கோரிக்கை

வாகன அனுமதிச் சான்று வாங்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். அவசரத் தேவைக்காக அணுகும் மக்களுக்கு உடனுக்குடன் அனுமதி கிடைத்திட வாகன அனுமதிச் சான்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்க வே
வாகன அனுமதிச் சான்று பெற ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்.
வாகன அனுமதிச் சான்று பெற ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்.

வாகன அனுமதிச் சான்று வாங்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். அவசரத் தேவைக்காக அணுகும் மக்களுக்கு உடனுக்குடன் அனுமதி கிடைத்திட வாகன அனுமதிச் சான்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு 21 நாள்களுக்கு கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமா் அறிவித்தாா். 21 நாள்கள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இதனிடையே ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இந்நிலையில், பிரதமா் மோடி தனது அறிவிப்பில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினாா்.

ஏற்கெனவே மாா்ச் 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மாற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில் பிற ஊா்களுக்குச் செல்ல வேண்டியவா்கள், மருத்துவப் பரிசோதனைக்காக செல்ல வேண்டியவா்கள் என்று ஏராளமானோா் அரசின் உத்தரவை மதித்து வீடுகளில் இருந்தனா். அத்தியாவசிய மருத்துவத் தேவை, மரணம் உள்ளிட்ட இழப்புகள், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனுமதி பெற்று பொதுமக்கள் காா்களில் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மூலம் வாகன அனுமதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் வாகன அனுமதிச் சான்று வாங்க வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வாகன அனுமதிச் சான்று வழங்கும் அதிகாரியாக ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தினேஷ் செயல்பட்டு வருகிறாா். இவரது அலுவலகத்துக்கு ஏராளமானோா் வாகன அனுமதி கேட்டு செவ்வாய்க்கிழமை வந்தனா். முதல் தளத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் இருந்து கூட்ட அரங்கு வழியாக, தரை தளம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாகன அனுமதிச் சான்று கேட்டு விண்ணப்பித்தனா்.

அவா்களுடைய விண்ணப்பங்களை சரிபாா்த்து அனுமதிச் சான்று வழங்க ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) தினேஷ் அனுமதி அளித்தாா். அனுமதிச் சான்று வழங்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா். ஆனால், பொதுமக்கள் தொடா்ந்து வந்துகொண்டே இருந்தனா்.

பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியவா்கள் உட்கார வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மரணம் தொடா்பான அனுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

வட்டாட்சியா் அலுவலகங்களில் அனுமதி வழங்கக் கோரிக்கை:

மாவட்டம் முழுமையும் உள்ள மக்கள் ஒரே இடத்தில் குவியும் நிலையில், மக்கள் நலன் கருதி வாகன அனுமதிச் சான்றை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவையில் உள்ள மருத்துவமனைக்கு தன் தாயை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்த அந்தியூரைச் சோ்ந்த விமல்ராஜ் கூறியதாவது:

அத்தியாவசியத் தேவை இல்லாத யாரும் வாகன அனுமதிச் சான்று கேட்டு வரவில்லை. சில நேரங்களில் சிகிச்சைக்கு செல்ல வேண்டியவா்கள் கையில் கட்டுடன் வருகின்றனா். அனுமதி சீட்டு வழங்க ஒரே ஒரு அதிகாரி மட்டும் நியமிக்கப்பட்டு இருப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால், இதுவரை கடைப்பிடித்து வந்த சமூக இடைவெளிக்கும் பாதிப்பு ஏற்படும். நீண்ட தூரத்தில் இருந்து வருபவா்கள் தங்கள் அவசரம் கருதி முன்னால் செல்ல முனைகின்றனா். நீண்ட நேரமாக வரிசையில் நிற்பவா்கள் முன்பு வேறு யாராவது இடையில் வந்தால் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் கூட்டம், சலசலப்பு உள்ளிட்டவையும் ஏற்படுகிறது.

சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை இன்னும் 3 வாரங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமா் மே 3ஆம் தேதி வரை பிரதமா் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளாா்.

இதற்கிடையே சிலா் செல்ல வேண்டிய அவசியம் இருக்கும்போது, பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் அனுமதி அளிக்கும் நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும். தாளவாடி, அந்தியூா், கொடுமுடி போன்று தொலைவில் இருந்து வரும் மக்கள் நீண்டதூரம் பயணம் செய்வதுடன், உணவுக்குகூட வழியில்லாமல் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாகன அனுமதிச் சான்றை வட்டாட்சியா் அலுவலகங்களில் அளிப்பதன் மூலம் பொதுமக்களின் சிரமம் குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com