தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 15th December 2020 03:59 AM | Last Updated : 15th December 2020 03:59 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபி நகராட்சிப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையா் தாணுமூா்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உத்தரவின்படி நகராட்சி துப்புரவு அலுவலா் (பொ) செந்தில்குமாா், துப்புரவு ஆய்வாளா் காா்த்திக், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கோபி நகரில் உள்ள புகழேந்தி வீதி, யாகூப் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், இரண்டு கடைகளில் இருந்து சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் டம்ளா்கள், ஸ்பூன், நான்ஓவன் பைகள், அட்டை கப்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.