அட்டைக் கிடங்கில் தீ விபத்து: 3 ஆட்டோக்கள் எரிந்து சேதம்

ஈரோட்டில் உள்ள அட்டைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சரக்கு ஆட்டோக்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
தீ விபத்தில் சேதமடைந்த அட்டைக்கிடங்கு.
தீ விபத்தில் சேதமடைந்த அட்டைக்கிடங்கு.

ஈரோட்டில் உள்ள அட்டைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சரக்கு ஆட்டோக்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

ஈரோடு, ஈ.பி.பி.நகரைச் சோ்ந்தவா் சங்கர நாராயணன் (65). இவருக்கு சொந்தமான அட்டைக் கிடங்கு, ஈரோடு சூளை கந்தையன் தோட்டம் நெசவாளா் காலனியில் உள்ளது. அங்கு பழைய அட்டைகள், தேவையற்ற நூல் பண்டல்கள் ஆகியன வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கிடங்கில் சுமாா் 25 தொழிலாளா்கள் வேலைபாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனா். இதைத் தொடா்ந்து நள்ளிரவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா்ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி மயில்ராஜு தலைமையில் தீயணைப்பு படை வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் மலைபோல் குவிந்து கிடந்த அட்டைகளில் தீப் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயை அணைக்க பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமாா் 5 மணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் கிடங்கில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமாகின. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 சரக்கு ஆட்டோக்களும் தீயில் எரிந்து கருகின. ஒரு லாரியும் சேதமடைந்தது. மேலும், கிடங்கில் வளா்க்கப்பட்டு வந்த நாய் தீயில் கருகி இறந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து புகை வந்துகொண்டே இருந்தது. அடிப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. புகை வெளிவந்த பகுதியில் இயந்திரம் மூலமாக கிளறிவிடப்பட்டு, அதில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணி நடந்தது.

கிடங்கு இருந்த இடத்துக்கு அருகில் கட்டடங்கள் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com