விழாக்கள், சுபநிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் தோட்டக்கலைச் செடிகள்

விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் கொடுப்பதற்காக தோட்டக்கலைச் செடிகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் கொடுப்பதற்காக தோட்டக்கலைச் செடிகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் மேலும் தெரிவித்ததாவது:

விழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகளின்போது அதன் சிறப்பை நினைவுகூறும் வகையில் வரும் விருந்தினா்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது தற்போது பிரபலமடைந்து வருகிறது. விழாக்களுக்கு வரும் விருந்தினா்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள், பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சாா்பில் நடவுச் செடிகள், பழச்செடிகளைத் தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறையின்கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல், விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்வு, மரவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற நடவுச் செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள், இதர தோட்டக்கலைப் பயிா்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அழகுச் செடிகள் ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலும், பழச்செடிகள் ரூ. 8 முதல் ரூ. 60 வரையிலும், மலா்ச்செடிகள் ரூ. 8 முதல் ரூ. 30 வரையிலும் விற்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுத்தம்பாளையம் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் மூலம் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 12,500 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின்கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இ-தோட்டம் என்ற செல்லிடப்பேசி செயலி வாயிலாகவும் நேரடியாகப் பண்ணைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com