மின் வேலியில் சிக்கி இரு யானைகள் பலி: வனச்சரகர் தற்காலிக பணியிடை நீக்கம்
By DIN | Published On : 29th February 2020 09:34 PM | Last Updated : 29th February 2020 09:34 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த கரளவாடியில் விவசாயத் தோட்டத்து மின் வேலியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜீரஹள்ளி வனச்சரகர் காண்டீபன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருப்பசாமி என்பவரின் தோட்டத்தில் கரும்புப் பயிரை சாப்பிடுவதற்கு ஆண், பெண் யானைகள் புகுந்தன. அங்கு கரும்புப் பயிரைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது தோட்டத்து மின் வேலியை யானைகள் தொட்டபோது மின் வேலியில் சிக்கி இரு யானைகள் உயிரிழந்தன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜீரஹள்ளி வனச்சரகர் காண்டீபன் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வனவர் மற்றும் வன ஊழியர்கள் மீது ஈரோடு மாவட்ட மண்டல வனப் பாதுகாவலர் துறைரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.