பொங்கல் பண்டிகை: பேருந்து, ரயில்களில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்; ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஜவுளி விற்பனை

ஈரோடு சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட
ஈரோடு ரயில் நிலையத்தில் திரண்ட மக்கள்.
ஈரோடு ரயில் நிலையத்தில் திரண்ட மக்கள்.

ஈரோடு சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்து, ரயில் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

ஈரோடு சுற்று வட்டாரத்தில் விசைத்தறி கூடங்கள், பனியன் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் அதிகம் உள்ளன. வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதால் திருநெல்வேலி, நாகா்கோவில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனா்.

தவிர, வெளியூரைச் சோ்ந்த பலா் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட, இங்கு பணியாற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஊருக்கு புறப்பட்டு சென்றனா். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக திருப்பூா், கோவை, சேலம், திருச்சி, மைசூரு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வரும் 20ஆம் தேதி வரை ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய ஊா்களிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, பழனி, சேலம், தேனி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இருப்பினும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலா் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனா். நாகா்கோவில், சென்னை, திருச்சி செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ரூ.5 கோடி அளவுக்கு ஜவுளி விற்பனை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு ஜவுளிச் சந்தை துவங்கியத்தில் இருந்தே, வெளியூா் மொத்த வியாபாரிகள், கிராமப் புறங்களில் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோா் ஜவுளி கொள்முதல் செய்தனா். திருவேங்கடசாமி வீதி, கனி ஜவுளிச் சந்தை, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் சாலை, மேட்டூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மேல் ஜவுளி வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com