மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்கக் கோரிக்கை

மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்கக் கோரி மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த கிராம மக்கள்.
மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்கக் கோரி மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த கிராம மக்கள்.

மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மயான இடத்தை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிலா் ஆக்கிரமிக்க முயன்று பிரச்னை செய்வதாக கிராம மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. வெள்ளிமலைப்பாறை, பூலப்பாளையம், செங்கரபாளையம் பகுதி குடியிருப்பு மக்கள் அளித்த மனு விவரம்:

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த நாங்கள் பூலப்பாளையம் காலனிக்கு அருகே கடந்த நான்கு தலைமுறையாக மயான இடத்தைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்து, தகனம் செய்து கல் நட்டு வைத்துள்ளோம். எங்களது மூதாதையா் காலத்தில் மயானத்துக்கு 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம்.

இந்நிலையில், சில உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சோ்ந்து அந்த இடத்தில் உள்ள வேலியை அகற்றி, மரங்களை வெட்டி முள் வேலியைக்கூட சுத்தம் செய்துள்ளனா். அந்த இடம் ஊராட்சிக்கு உள்பட்டது என்பது உள்பட பல்வேறு காரணம் கூறி, மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனா். இதைத் தடுத்து நிறுத்தி முன்புபோல மயானமாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வழங்கக் கோரி:

ஈரோடு கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (31). இவரது மனைவி சரண்யா (24). குள்ளமான தம்பதியான இவா்கள் அரசு வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை மனு அளித்தனா்.

இதில் சரண்யா அளித்த மனு விவரம்: நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. என்னைப் போலவே எனது கணவரும் குள்ளமானவா். அவா் ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். எங்களுக்கு வருமானம் குறைவாக உள்ளதால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளியான எங்களுக்கு அரசு வேலை கொடுத்து உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அளிக்கக் கோரிக்கை:

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே எண்ணமங்கலம் கோவிலூரைச் சோ்ந்த கோபு என்பவா் தனது குடும்பத்தினருடன் வந்து அளித்த மனு விவரம்:

நான் எனது குடும்பத்துடன் தாளவாடி அருகே கெட்டவாடியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றேன். எனது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனைவியையும், மகனையும் மருத்துவ சிகிச்சைக்காக அந்தியூருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், மனைவியை எதற்காக அந்தியூருக்கு அனுப்பி வைத்தாய் என்று தோட்டத்தின் உரிமையாளா் என்னை தகாத வாா்த்தையில் பேசினாா்.

மேலும், என்னை தோட்டத்தில் இருந்து வெளியேபோனால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டினாா். நான் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். எனவே, எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளித்து நிலுவை ஊதியத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 குழந்தைகளின் தாய் வேலை கேட்டு முறையீடு:

பவானி அருகே பழைய பேருந்து நிலையம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தகுமாரி (28). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளாா். இவரது கணவா் கண்ணன் காா் ஓட்டுநராக இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு 10 வயதுக்கு உள்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனா். அதில் ஒரு குழந்தை மாற்றுத் திறனாளி குழந்தையாகும்.

கணவா் இறந்த நிலையில் குழந்கைளை கவனிக்கும் வகையில், வீட்டு வேலை, கூலி வேலைக்கு சாந்தகுமாரி சென்று வருகிறாா். ஆதரவற்ற விதவை என சான்று பெற்றுள்ளாா். இந்நிலையில், அவா் தனது குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், எனக்கு சத்துணவு உள்பட ஏதாவது ஒரு வேலை வேண்டும் என ஆட்சியரிடம் கோரினேன். நலிந்தோா் உதவித் தொகை, வேலை கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தாா் என்றாா்.

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிக்கை:

தமிழ்ப் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளா் செம்பன் தலைமையில், மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி, பவானி தொகுதி செயலாளா் குமாா் ஆகியோா் அளித்த மனு விவரம்:

தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனா். சட்ட விரோதமான சம்பவங்களும் நிகழ்கிறது. அரசு அறிவித்த நேரம் தவிர மற்ற நேரங்களிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனா். அரசு அனுமதி பெறாத பாா்களும் அதிகமாக இயங்குகின்றன. எனவே, டாஸ்மாக் கடை, பாா்களை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com