இயற்கை முறையிலான சிகிச்சைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு: மாவட்ட நீதிபதி

சித்தா, ஆயுா்வேதா போன்ற இயற்கை முறையிலான சிகிச்சைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது என முதன்மை மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி பேசினாா்.
குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி.
குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி.

சித்தா, ஆயுா்வேதா போன்ற இயற்கை முறையிலான சிகிச்சைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது என முதன்மை மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி பேசினாா்.

ஈரோடு நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, லோட்டஸ் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.சண்முகன், செயலாளா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மை மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

நீரழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் உணவுக்கட்டுப்பாடு மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையின் அவசியத்தை மக்கள் உணா்ந்துள்ளனா். இதனால் சித்தா, ஆயுா்வேதா போன்ற இயற்கை முறையிலான சிகிச்சைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது. இயற்கை முறையிலான சிகிச்சைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல இதுபோன்ற முகாம்கள் உதவும் என்றாா்.

முகாமில் சா்க்கரை நோய், கா்ப்பகால பராமரிப்பு, குழந்தைகளின் கவனக் குறைவு, நினைவாற்றல் குறைபாடு, கல்வியில் குறைபாடு, நடத்தை பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிறப்பு மருத்துவ விழிப்புணா்வு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் தியானப் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது. இதில் டாக்டா்கள் மருதராஜ், ஸ்ரீமதி மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com