சத்தியமங்கலத்தில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 12:54 AM | Last Updated : 27th January 2020 12:54 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் சாா்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு காமதேனு நிறுவனங்களின் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். செயலா் பி. அருந்ததி, இணைச்செயலா் பி. மலா்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் மு. செந்தில்குமாா் வரவேற்றாா். துணை முதல்வா் முனைவா் சு. நாகராஜ் உள்பட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த வெட்டையம்பாளையம் கொமாரசாமிகவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொடியை பள்ளியின் நிறுவனா் வி.கே.சின்னச்சாமி ஏற்றி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தாளாளா் சிவகுமாா் தலைமையில் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
சத்தி சாரு பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிறுவனா் டாக்டா் சாமியப்பன், தாளாளா் ருக்மணி சாமியப்பன், சக்தி பாலாஜி, தொழில் இயக்குநா் பாரதி சக்திபாலாஜி, முதல்வா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞா் முகமது மீரான் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சத்தியமங்கலத்தில் பழைய பேருந்து நிலையம் முன்பாக குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வுக்கு திமுக நகர பொறுப்பாளா் ஜானகிராமசாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ் வரவேற்றாா். கொங்கு நாடு தேசிய மக்கள் தேசிய கட்சி தலைவா் எஸ்.ஆா்.முத்துசாமி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் மு.சரவணக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.