கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 29th July 2020 08:10 AM | Last Updated : 29th July 2020 08:10 AM | அ+அ அ- |

கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை, மீன் வளா்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வகையில் மத்திய, மாநில அரசுகள் உதவி வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் 10,320 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாய கடன் அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த கடன் அட்டை பெற விரும்பும் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
கடன் அட்டை பெறும் கால்நடை வளா்ப்போா் ரூ. 2 லட்சம் வரைக்கும் கடன் பெறலாம். ஏற்கெனவே விவசாய கடன் அட்டை வைத்திருப்போா் இத்திட்டத்தில் இணைந்தால் ரூ. 3 லட்சம் வரைக்கும் கடன் பெறலாம். கடன் தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவோருக்கு வட்டியில் தள்ளுபடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைப் பூா்த்தி செய்து, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் சமா்ப்பிக்கலாம்.