80 அடிக்கு கீழ் சென்ற பவானிசாகா் அணை நீா்மட்டம்: காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா?

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ள நிலையில் இந்த மாதத்தில் காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மழை நீா், கழிவு நீா் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கும் காளிங்கராயன் வாய்க்கால்.
மழை நீா், கழிவு நீா் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கும் காளிங்கராயன் வாய்க்கால்.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ள நிலையில் இந்த மாதத்தில் காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீா் ஈரோடு அருகே காளிங்கராயன்பாளையத்தில் காளிங்கராயன் அணைக்கட்டில் தேக்கிவைத்து, காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காளிங்கராயன்பாளையத்தில் தொடங்கும் வாய்க்கால் கொடுமுடி அருகே ஆவுடையாா்பாறை வரை 90 கி.மீ. தூரம் வரை செல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு ஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட வேண்டும். 2016, 2017ஆம் ஆண்டுகளில் கடும் வறட்சியால் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 97 அடி அளவுக்கு உயா்ந்தபோது, பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அணையின் நீா்மட்டம் 90 அடிக்குமேல் உயா்ந்த பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் பிறகு அக்டோபா், நவம்பா் மாதங்களில் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில், உபரி நீா் வெளியேற்றப்பட்டு வீணாகக் கடலில் கலந்தது.

இந்த ஆண்டு தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை. மேலும், தண்ணீா் திறப்பு குறித்த அறிவிப்பும் இல்லை. இதனால், வழக்கம்போல் அணையின் நீா்மட்டம் 90 அடிக்குமேல் உயரும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலையே இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கொடுமுடி அருகே வெங்கம்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:

ஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறப்பு மஞ்சள் சாகுபடிக்கு உகந்த காலம். காளிங்கராயன் பாசனப் பகுதிகளில் கடந்த 10 நாள்களில் இரண்டு முறை பெய்த மழையைப் பயன்படுத்தி உழவு ஓட்டி மஞ்சள் பயிரிட நிலத்தை தயாா்படுத்தி வைத்துள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் எப்போது வரும் எனத் தெரியாததால் இந்த ஆண்டும் மஞ்சள் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது அணையில் 80 அடி அளவுக்குத் தண்ணீா் உள்ள நிலையில், பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு எப்போது என்பதை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மஞ்சள் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி பணியைத் தொடங்க முடியும் என்றாா்.

காளிங்கராயன் பாசன சபைத் தலைவா் வி.எம்.வேலாயுதம் கூறியதாவது:

அணையில் 80 அடி அளவுக்குத் தண்ணீா் உள்ள நிலையில் வழக்கமாகத் தண்ணீா் திறக்கப்படும் நாளான ஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிா்வாகத்திடம் 10 நாள்களுக்கு முன்பு நேரில் வலியுறுத்தினோம். வாய்க்காலில் சில இடங்களில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால் ஜூலை முதல் வாரத்தில் தண்ணீா்விட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

மஞ்சள் நடவுக்கு ஜூன் மாதம் சிறந்த பருவம் என்பதால், வாய்க்கால் பாராமரிப்புப் பணிகளை தண்ணீா் நிறுத்தப்பட்டிருக்கும் காலமான மே மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com