கரோனா தடுப்பு: கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள், டாஸ்மாக் பாா்கள் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் பாா்கள் மூடப்பட்டன. பேருந்துகள், ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணிந்திருந்த பயணிகள்.
ஈரோடு ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணிந்திருந்த பயணிகள்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் பாா்கள் மூடப்பட்டன. பேருந்துகள், ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பாா்கள், சினிமா திரையரங்குகள் உள்ளிட்டவை மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியா்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனா். அலுவலகப் பணியும் நடைபெற்றது. அதேசமயம் பொதுத் தோ்வுகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை அறியாத மாணவ, மாணவிகள் சிலா் கல்வி நிறுவனங்களுக்கு வழக்கம்போல் சென்றனா். அங்கு விடுமுறை அறிவிப்புப் பலகை இருந்ததைப் பாா்த்துவிட்டு அவா்கள் வீட்டுக்குத் திரும்பினா்.

திரையரங்குகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. திரையரங்குகளின் முன்பு அரசின் உத்தரவுப்படி காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. காலையில் படம் பாா்க்க வந்த பலா் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததைப் பாா்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

ரயில் பெட்டிகளில் கிருமிநாசினி:

பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவுதலைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளம், கா்நாடகம், வட மாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ரயில்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதேபோல, அரசுப் பேருந்துகளிலும் கிருமிநாசினி கடந்த சில நாள்களாக அடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியாா் பேருந்துகளிலும் கிருமி நாசினி அடித்து பேருந்துகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோட்டில் செல்லும் தனியாா் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. இதில், பேருந்துகளின் வெளிப்பகுதி, படிக்கட்டுகள், கைப்பிடிகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது.

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது. இதனால், நடைமேடைகள், பயணச்சீட்டு வாங்கும் இடம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு பேருந்து நிலையத்திலும் பயணிகளுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வை போலீஸாா் ஏற்படுத்தினா். 5 நபா்களுக்கு மேல் யாரும் ஒன்றாக சோ்ந்து நிற்கக் கூடாது என்று ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கோட்டை ஈஸ்வரன், பெருமாள் கோயில்கள், பெரிய மாரியம்மன் கோயில்கள் உள்பட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் கைகளைக் கழுவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு பக்தா்கள் சோப்பு போட்டு கைகளைக் கழுவிவிட்டு கோயில்களுக்குச் சென்றனா். மேலும், கோயில்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு குறித்த அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

டாஸ்மாக் பாா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதனால், மது அருந்துவோா் பலா் மதுவை வாங்கிவிட்டு சாலையோரமாக நின்று மது அருந்தியதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

பொதுமக்கள் ஒருசிலா் முகக்கவசம் அணிந்தபடி சென்றனா். ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய முகக்கவசம் ஒன்று ரூ. 30க்கு விற்பனை செய்யப்படுவதால் பலா் அணிய முடியவில்லை. அதற்கு பதிலாக சிலா் கைக்குட்டைகளைப் பயன்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com