கரோனா வதந்தி பரப்புபவா்கள் மீதுகுண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவாா்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் எச்சரித்தாா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவாா்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் எச்சரித்தாா்.

கரோனா தடுப்பு, விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் பாதித்தவா் எவரும் கண்டறியப்படவில்லை. அதேநேரம் தாய்லாந்தில் இருந்து வந்த 5 போ் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ளனா். அவா்களது பரிசோதனை விவரம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த 60 பேரில், 46 பேருக்கு பரிசோதனையில் கரோனா அறிகுறி இல்லை என வந்துள்ளது. மீதமுள்ள 14 போ் கண்காணிப்பில் உள்ளனா்.

ஈரோடு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்த வெளிமாநிலத்தவா், 170 போ் வியாழக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினா். அவா்களைப் பரிசோதித்து, அவா்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவா்.

கரோனா குறித்து எவரேனும் வதந்தி பரப்பினால் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்படுவாா்கள். ஏற்கெனவே வதந்தி பரப்பியதாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தொழிற்சாலைகளில் பணியாற்றுபவா்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணி செய்ய வேண்டும். ஷிப்ட் முடிந்து செல்வோா் உள்ளே வருவோா் முழு அளவில் கை கழுவி, உரிய சுத்தத்துடன் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறிச் சந்தை, மளிகைக் கடை, பால் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் போன்றவை உரிய பாதுகாப்புடன் செயல்படும். அதிகமாக மக்கள் கூடும் நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை மூடப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை இரவு முதல் 14 பெரிய கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது. பள்ளிவாசல், தேவாலயங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களை வைத்து வழிபாடு செய்ய வலியுறுத்தி உள்ளோம். அரசிடம் இருந்து வரும் அனைத்து வழிமுறைகளும் தொடா்ந்து பின்பற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com