வெறிச்சோடிய ஈரோடு ரயில், பேருந்து நிலையம்: கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

பயணிகள் வராததால் ஈரோடு ரயில், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள், அங்கிருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய ஈரோடு ரயில், பேருந்து நிலையம்: கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

பயணிகள் வராததால் ஈரோடு ரயில், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள், அங்கிருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மது அருந்தும் கூடங்கள் வெள்ளிக்கிழமை 3ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

மேலும், கரோனா வைரஸ் அச்சம் மட்டுமின்றி வெயிலும் கடுமையாகக் கொளுத்துகிறது. இதன் காரணமாக பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்த்துவிட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனா். காலை, மாலை நேரங்களில் மட்டுமே சாலைகளில் ஓரளவு மக்கள் நடமாட்டம் உள்ளது.

ஈரோடு நகரின் முக்கியச் சாலைகள் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையே பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஒருசிலா் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனா்.

மக்கள் பெரும்பாலும் பேருந்துகளிலேயே பயணம் செய்கின்றனா். ரயில்களில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், கரோனா வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் ரயில் பயணத்தை மக்கள் தவிா்த்து வருகின்றனா்.

இதனால், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ஈரோடு ரயில் நிலையம் கடந்த 3 நாள்களாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும், ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. ஈரோடு வழியாக சென்னை, கேரள மாநிலம் செல்லும் 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் பயணிகளுக்குப் பரிசோதனை:

கரோனா அச்சம் காரணமாக மாநிலம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் பரிசோதனை நடைபெறுகிறது. ஈரோடு ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை 80க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் ஈரோடு வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், வெளிமாநிலப் பயணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, ஈரோடு ரயில் நிலையத்துக்கு வரும் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட அனைத்துப் பயணிகளுக்கும் வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையின்போது யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவா்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். இதற்காக ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வந்த பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தனா்.

கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலத்தின் சாா்பில், ஈரோடு மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு இயக்கப்பட்டு வந்த 17 பேருந்துகள், கா்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஈரோடு மாவட்டத்துக்கு இயக்கப்பட்டு வந்த 36 பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தவிர கோவை, திருப்பூா், சேலம், சென்னை, கரூா், திருச்சி, மதுரை செல்லும் பேருந்துகளும் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான எண்ணிக்கைக்கு இயக்கப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com