சென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 07:18 AM | Last Updated : 11th May 2020 07:18 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு தினமும் உள்ளூா் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலுக்கு விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம். மேலும், முகூா்த்த தினங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால் கடந்த 40 நாள்களுக்கு மேலாக தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தற்போது பொது முடக்க உத்தரவு படிப்படியாக தளா்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்வதற்காக பொதுமக்கள் கோரிக்கை வைத்து கோயில் அலுவலகத்தில் அனுமதி கேட்டு வருகின்றனா். ஆனால், அரசின் மறு உத்தரவு வரும் வரை, சென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை என கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தெரிவித்தனா்.