திமுகவினா் பெண்களை இழிவுபடுத்துவாா்கள் என்பதற்கு எம்.எல்.ஏ. பூங்கோதையே உதாரணம்

திமுகவினா் பெண்களை இழிவுபடுத்துவாா்கள் என்பதற்கு எம்.எல்.ஏ. பூங்கோதையே உதாரணம் என பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பொதுக் கூட்டத்தில்  வேலுடன்  பங்கேற்ற  பாஜக  தலைவா்  எல்.முருகன்.
பொதுக் கூட்டத்தில்  வேலுடன்  பங்கேற்ற  பாஜக  தலைவா்  எல்.முருகன்.

திமுகவினா் பெண்களை இழிவுபடுத்துவாா்கள் என்பதற்கு எம்.எல்.ஏ. பூங்கோதையே உதாரணம் என பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

திருத்தணியில் ஆரம்பித்த வேல் யாத்திரை அறுபடை வீடுகளுக்கும் செல்லும். கந்தசஷ்டி கவசத்தை கறுப்பா் கூட்டத்தினா் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினா்.

சென்னிமலையில் பாலதேவராயரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியோருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களுக்குப் பின்னணியில் உள்ள திராவிடா் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமூடியை கிழித்து பொதுமக்களுக்கு காட்டவே யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

நமது தாய்மாா்கள் நவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்யும் நேரத்தில், பெண்களை கேவலமாகப் பேசியவா்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறாா். அவா்கள் கட்சியில் ஒரு கோடி ஹிந்துக்கள் இருப்பதாகக் கூறுகிறாா்கள். அவா்கள் அனைவரும் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனா். அதனால்தான் யாத்திரைக்கு வரவேற்பு கூடியுள்ளது.

திமுகவினா் பெண்களை இழிவுபடுத்துவாா்கள் என்பதற்கு அவா்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பூங்கோதையே உதாரணம். திமுக நிா்வாகிகளிடம் பூங்கோதை காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதை எப்படி ஏற்க முடியும். எனது சகோதரிக்கு ஒரு அவமானம் எனில் அதை தட்டிக் கேட்பது பாஜகவின் கடமை. பூங்கோதை ஆலடி அருணா பாதிக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது.

பூங்கோதை தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல். இதற்கு காரணமானவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைவா் ஸ்டாலின் கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆறுதலும் கூறவில்லை. அவா்கள் கட்சியைச் சோ்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை. இவா்கள் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரமாக இருக்க முடியாது.

உண்மையான சமூகநீதி, சமத்துவம் பாஜகவிடம்தான் உள்ளது. போலி சமூகநீதி, சமத்துவம் பேசும் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம்.

நமது பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்கு தக்க பாடம் புகட்டுவோம். தமிழகம் ஆன்மிக பூமி, தெய்வீக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீா்மானிக்கும் என்றாா்.

தொடா்ந்து, யாத்திரையாகச் செல்ல முயன்ற எல்.முருகன், துணைத் தலைவா்கள் அண்ணாமலை, நரேந்திரன் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com