முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கரோனா அச்சம்: பேருந்துகளை முழுமையாக இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th October 2020 10:46 PM | Last Updated : 04th October 2020 10:46 PM | அ+அ அ- |

ஈரோடு பேருந்து நிலையத்தில் முண்டியடித்துக்கொண்டு பேருந்தில் ஏறும் பயணிகள்.
ஈரோடு: குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் பயணம் மேற்கொள்வது கரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் 5 மாதங்கள் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனிடையே பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால் கடந்த மாதம் முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை கரோனாவுக்கு முன்பு வரை 820 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொது முடக்க கட்டுப்பாட்டுகள் தளா்த்தப்பட்ட பின்னா் இப்போது சுமாா் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூா், மதுரை, திருச்சி, சேலம், சென்னை உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் ரயில்கள் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால் வெளியூா் செல்லும் பயணிகள் பேருந்துகளைத்தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி, சேலம், கரூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வா். பொது முடக்கத்துக்கு முன்பு வரை அந்த ஊா்களுக்கு 24 மணி நேரமும் பேருந்து வசதி இருந்தது. ஆனால், தற்போது இரவு 10 மணிக்கு மேல் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும் பேருந்தில் 40 பயணிகள் ஏறினால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் இரவு 10 மணிக்கு மேல் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு செல்லும் பயணிகள் விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த நுகா்வோா் அமைப்பு நிா்வாகி மாதேஸ்வரன் கூறியதாவது:
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியூா்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பேருந்துகளில் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.
காலை மற்றும் மாலை நேரத்தில் ஈரோட்டில் இருந்து கோவை, கரூா், நாமக்கல் செல்லும் பேருந்துகள், பெருந்துறை, சென்னிமலை, பவானி செல்லும் நகர பேருந்துகளில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்கின்றனா். இதுபோன்ற பயணத்தால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில் பேருந்து பயணத்தில் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றாா்.