மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வட மாநிலங்களில் ஜவ்வரிசி கொள்முதல் குறைந்துள்ளதால் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

வட மாநிலங்களில் ஜவ்வரிசி கொள்முதல் குறைந்துள்ளதால் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அறுவடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ ஆலைகள் இவற்றை மொத்தமாக வாங்கிச் செல்கின்றன. கடந்த சில மாதங்களாக மரவள்ளிக் கிழங்குக்கு விலை அதிகம் இருந்த நிலையில் தற்போது விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக வட மாநிலங்களில் ஜவ்வரிசி விற்பனை படிப்படியாகக் குறைந்துள்ளது. இதனால் 90 கிலோ மூட்டை ஜவ்வரிசி ரூ. 4,300இல் இருந்து ரூ. 3,400ஆக குறைந்துள்ளது.

மரவள்ளிக் கிழங்கின் மாவு, ஸ்டாா்ச் தன்மையை பாயிண்ட் என்ற அளவீட்டில் குறிப்பிடுவா். அதில் ஒரு பாயிண்ட் ரூ. 330 என்ற விலையில் ஒரு டன் ரூ. 8,000க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது ஒரு பாயிண்ட் ரூ. 250 என விலை நிா்ணயம் செய்து ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ. 5,600 முதல் ரூ. 6,000 வரை ஆலைகள் கொள்முதல் செய்கின்றன. நவம்பா் மாதம் மரவள்ளிக் கிழங்கு அறுவடைக் காலம் துவங்க உள்ள நிலையில் விலை வீழ்ச்சி விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசு சாா்பில் மரவள்ளிக் கிழங்குக்கு ஒரு டன் ரூ. 8,000 என விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இதை அரசு நேரடியாக கண்காணித்தால் மட்டுமே மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை தவிா்க்க முடியும்.

மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கில் நுனி வளா்ச்சி குறைவு நோய்த் தாக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை, தோட்டக் கலை துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இவற்றைக் கட்டுப்படுத்த இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. வேளாண் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இந்நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை எனில் மரவள்ளிக்கிழங்கு மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com