திமுக தோ்தல் அறிக்கையில் ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பை பதிவு செய்யக் கோரிக்கை

திமுக தோ்தல் அறிக்கையில் விவசாயிகளை பாதிக்கும் ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

ஈரோடு: திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் விவசாயிகளை பாதிக்கும் ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இது குறித்து பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் திட்ட பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கி.வே.பொன்னையன், அா்ச்சுணன், கண்ணுசாமி ஆகியோா் திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினா், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜை ஈரோட்டில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளா் கி.வே.பொன்னையன் கூறியதாவது:

கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஐடிபிஎல் திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கப்படுகிறது. கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக இக்குழாய் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். அந்த நிலத்தை விற்க முடியாது. அங்கு வீடு கட்டுதல், கிணறு அமைத்தல் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ள இயலாது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இதற்கு மாற்றாக சாலையோரமாக குழாய்களைப் பதிக்க வேண்டும் என கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

கெயில் திட்டமும் இதேபோன்று விளை நிலங்கள் வழியாக குழாய் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்திருந்தனா். அதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. அதேபோல் ஐடிபிஎல் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற தீா்மானத்துடன் திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் இக்கோரிக்கையை சோ்க்க வேண்டும் என வலியுறுதினோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com