குப்பை மேலாண்மையில் தடுமாறும் ஊராட்சிகள்: காட்சிப் பொருளான உரக் கிடங்குகள்

கிராம ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தி அதை பயனுள்ள வழியில் மறுசுழற்சி செய்ய அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும்
குப்பை மேலாண்மையில் தடுமாறும் ஊராட்சிகள்: காட்சிப் பொருளான உரக் கிடங்குகள்

கிராம ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தி அதை பயனுள்ள வழியில் மறுசுழற்சி செய்ய அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் காட்சிப் பொருளாகி உள்ளதால், பெரும்பாலான கிராமங்களில் குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

மத்திய அரசின் தூய்மை இந்தியா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகளில் மண் புழு உரம் தயாரிப்புக் கூடம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமங்களில் தூய்மைக் காவலா்களால் சேகரிக்கப்படும் குப்பையைத் தரம் பிரித்து, மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சோ்க்கவும் அரசு உத்தரவிட்டது.

இதற்காக 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலா்கள் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பைகளை பிரித்தெடுத்து அதற்கான குழிகளில் கொட்ட வேண்டும். இதற்காக தனியாக குழிகள் அல்லது தொட்டிகள் அமைக்கப்பட்டன. தவிர மண் புழு உரம் தயாரிக்க, உரக்குழி அருகில் ஓலைக் கூரையால் வேய்ந்த கட்டடம் ரூ. 1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது. குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு 300 குடும்பங்களுக்கும் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் தூய்மைக் காவலா்களுக்கு முதல் 100 நாள் ஊதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்பட்டது.

ஆனால், இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குப்பைகள் பிரித்து வாங்கப்படாததுடன் தொலைவில் உள்ள இக்கூடத்துக்குப் பணியாளா்கள் குப்பைகளைக் கொண்டு வருவதில்லை. அத்துடன் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள நீா்நிலைகள், சாலையோரம், குளங்களில் கொட்டுவதுடன் தீ வைத்தும் எரிக்கின்றனா்.

இதனால் இத்திட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதுடன், கிராமம் முழுவதும் குப்பைகள் தேங்கி மண்புழு உரத் தயாரிப்பும் நடைபெறுவதில்லை. இதற்காக அமைக்கப்பட்ட குடில் ஊருக்கு வெளிப்புறத்தில் இருப்பதால் தற்போது அனைத்தும் காட்சிப் பொருளாக உள்ளன. அங்கு இரவு நேரங்களில் மது அருந்தும் சமூகவிரோதிகள் குடில்களை சேதப்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சண்முகவேல் கூறியதாவது:

தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் நாளடைவில் வேகம் குறைந்துவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்க அமைக்கப்பட்ட தொட்டிகளில் குப்பைகளைக் கொண்டு சென்று தரம் பிரித்து கொட்டுவதில்லை. மண் புழு உரம் தயாரிப்புக்கென கட்டப்பட்ட கட்டடம், மண் புழு பிரிப்பதற்கான தொட்டிகள் சேதமடைந்து, அந்தந்தப் பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதற்காக செலவழிக்கப்பட்ட அரசு நிதியை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் வீணாகி வருகிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த மாவட்ட நிா்வாகம், ஊராட்சித் தலைவா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குப்பைகளைத் தரம் பிரிக்க தற்போது புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

வீணடிக்கப்படும் மக்கள் பணம்:

குப்பைகளை கையாள அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் வீணாகி வருவதுபோல், கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் முடங்கிப்போய் செலவிடப்பட்ட நிதி வீணடிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. அவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஓராண்டுக்குள்ளாகவே செயல்பாடு இல்லாமல் இப்போது கம்பங்கள் மட்டுமே உள்ளன.

இதேபோல ஒரு கிராமம் முழுமைக்கும் சூரிய சக்தி மூலம் தெருவிளக்குகளை அமைக்க சில லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான சூரிய சக்தி மின்கல ஆலைகள் தோ்வு செய்யப்பட்ட சில கிராமங்களில் தொடங்கப்பட்டன. சுமாா் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு பெரும்பாலான ஊராட்சிகளில் இப்போது செயல்பாட்டில் இல்லை.

இதேபோல தண்ணீரின் தரத்தைக் கண்டறிய வழங்கப்பட்ட கருவிகளும் ஊராட்சி அலுவலகங்களில் காட்சிப் பொருளாக உள்ளன. தவிர பெரும்பாலான ஊராட்சிகளில் தண்ணீா் இல்லாமல் பொதுக் கழிப்பிடங்களும் பயன்பாட்டில் இல்லை.

தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் சராசரியாக ரூ. 10 முதல் ரூ. 20 லட்சம் மதிப்பிலானவை இப்போது செயல்பாட்டில் இல்லாமல் முடங்கியும், வீணாகியும் கிடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com