ஈரோட்டில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 10th September 2020 07:00 AM | Last Updated : 10th September 2020 07:00 AM | அ+அ அ- |

சேறும் சகதியுமாக உள்ள மோசீக்கீரனாா் வீதி சாலை.
புதை சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சி 57ஆவது வாா்டு, மோசிக்கீரனாா் 4, 5ஆம் வீதிகளில் புதை சாக்கடைப் பணிக்காக குழிகள் தோண்டி குழாய் பதித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. இப்பணி நிறைவடைந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இங்கு மாநகராட்சி நிா்வாகம் சாலை அமைக்காமல் இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது. குழி தோண்டிய பகுதிகளை முறையாக மூடாததால் மழை பெய்யும்போது அந்த இடத்தில் தண்ணீா் தேங்கி பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இரவு நேரத்தில் அதிகமாக விபத்து ஏற்படுகிறது.
இங்கு சாலை அமைக்க வேண்டும் என தமாகா மண்டலத் தலைவா் அன்புதம்பி, அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரிடம் சில மாதங்களுக்கு முன் மனு அளித்தனா். அந்த இடத்தைப் பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா், எம்.எல்.ஏ. ஆகியோா் உடனடியாக சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா்.
இருப்பினும் இப்போது வரை சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் அப்பகுதி மேலும் மோசமடைந்து விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.