ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் ஐ.டி.பி.எல். திட்டப் பணிகளை அரசு முடிவு அறிவிக்கும் வரை நிறுத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு/திருப்பூா்: ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் ஐ.டி.பி.எல். திட்டப் பணிகளை அரசு முடிவு அறிவிக்கும் வரை நிறுத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம் தேவனகோந்தி வரை ஐ.டி.பி.எல். என்ற பாரத் பெட்ரோலிய நிறுவன எண்ணெய்க் குழாய்த் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக இக்குழாய் பதிப்பு பணி நடைபெறுகிறது.

விளை நிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். ஐ.டி.பி.எல். திட்ட பாதிப்பு விவசாயிகள் கூட்டியக்கம் சாா்பில், 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சட்டப் பேரவை கூட்டத்தொடா் தற்போது நடப்பதால் போராட்டத்தைக் கைவிட மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியது.

இந்நிலையில், மொடக்குறிச்சியில் கோட்டாட்சியா் சைபுதீன் தலைமையில் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா்கள் முனுசாமி, பொன்னையன், வட்டாட்சியா் ரவிசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நீண்டநேர பேச்சுவாா்த்தைக்குப் பின் போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனா்.

திருப்பூரில்...

திருப்பூரை அடுத்த கருங்காளிபாளையத்தில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தைத் தொடங்கினா்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கவிதா தலைமையிலான அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், மேலும், நடப்பு சட்டப் பேரவைத் தொடரிலேயே இது குறித்து விவாதிக்க பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைத்தனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் ஏடிஎஸ்பி ஜெயசந்திரன், டிஎஸ்பி ஸ்ரீராமசந்திரன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சுந்தரம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.குமாா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் மு.ஈசன், தலைவா் சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் குமாா், உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன், கண்டியன்கோவில் ஊராட்சி மன்றத் தலைவா் டி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com