தனியாா் பேருந்துகள்அக்டோபா் 1 முதல் இயக்கம்
By DIN | Published On : 18th September 2020 11:06 PM | Last Updated : 18th September 2020 11:06 PM | அ+அ அ- |

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரோடு வந்த தனியாா் பேருந்து.
ஈரோடு, செப். 18: ஈரோடு மாவட்டத்தில் இருந்து அக்டோபா் 1ஆம் தேதி முதல் தனியாா் பேருந்துகள் இயக்கப்படும் என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி தெரிவித்தாா்.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மாா்ச் 24ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னா், மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலத்துக்குள் மட்டும் போக்குவரத்து நடைபெற்று வந்தது. பின்னா், மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. எனினும் கரோனா தாக்கம் குறையாததால் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மீண்டும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது. அதைத் தொடா்ந்து 7ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் அனைத்துப் பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் மாவட்டத்துக்குள் 40 பேருந்துகள், வெளி மாவட்டங்களான கரூா், சேலம், கோவை, திருப்பூா், பழனி, மேட்டூா் போன்ற வெளி மாவட்டங்களுக்கு 248 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
அரசு அறிவிப்பின்படி 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்பதால் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனிடையே சில நாள்களாக சேலம், திருப்பூா், கோவை பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்போது பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால், ஈரோடு மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபா் 1ஆம் தேதி முதல் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் இருந்து அனைத்து தனியாா் பேருந்துகளும் இயக்கப்படும் என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி தெரிவித்தாா்.