ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
யுவராஜ்
யுவராஜ்

ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு, பெருந்துறையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுதி ஈமு "ஃபார்ம்ஸ் நிறுவனத்தை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் மாநிலத் தலைவர் யுவராஜ் மற்றும் தமிழ்நேசன், வாசு ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இதில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி திட்டம் ஒன்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் அதற்கு ஒரு செட் அமைத்துக் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு 6 ஈமுக் கோழிகள் கொடுத்தும், அதற்குத் தேவையான தீவணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பதாகவும், மேலும் மாதாமாதம் பராமரிப்புத் தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.7 ஆயிரமும், ஆண்டு முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இரண்டாவது திட்டத்தின் படி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால், 6 ஈமுக் கோழிகள் வழங்கி, மாதம் ரூ.8 ஆயிரம் பராமரிப்புத் தொகையும், ஆண்டு முடிவில் ரூ.20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை நம்பி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 15 ஆயிரத்து 550 மோசடி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அளித்தப் புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸôர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து 2012 அக்டோபரில் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள  தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் முடிவில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், மூன்று பேருக்கும் சேர்ந்து ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிணையில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com