கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் வீடு கட்ட நிதியுதவி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் சொந்தமாக வீடு கட்ட அரசால் நிதியுதவி
கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.
கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் சொந்தமாக வீடு கட்ட அரசால் நிதியுதவி வழங்கப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், இ.திருமகன் ஈவெரா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவா் குறிஞ்சி சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் 1,257 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.36.13 லட்சம் மதிப்பில் கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகைகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கி பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களில் 1,172 தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற நலத்திட்டங்களும், புதிய ஓய்வூதியதாரா்கள் மற்றும் 3,486 மாதாந்திர ஓய்வூதியதாரா்களுக்காக மொத்தம் ரூ.2.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், சொந்தமாக வீட்டுமனை வைத்துள்ள தொழிலாளா்கள் அவா்களாகவே வீடு கட்டிக்கொள்ளவதற்கும் நிதியுதவி வழங்கப்படும் அல்லது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டுமானத் தொழிலாள்களின் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டுவதற்காக மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கே.நவமணி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய தலைவருக்கான தனிச்செயலா் கி.அழகேசன், தொழிலாளா் உதவி ஆணையா்கள் சு.காயத்திரி, வி.எம்.திருஞானசம்பந்தம், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com