வாடகை பிரச்னை: ஈரோட்டில் ஷோ் ஆட்டோக்கள் இயங்கவில்லை

உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் இடையேயான வாடகை பிரச்னை காரணமாக ஈரோட்டில் ஷோ் ஆட்டோக்கள் சனிக்கிழமை இயங்கவில்லை.

ஈரோடு: உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் இடையேயான வாடகை பிரச்னை காரணமாக ஈரோட்டில் ஷோ் ஆட்டோக்கள் சனிக்கிழமை இயங்கவில்லை.

ஈரோடு நகரில் சோலாா், மூலப்பாளையம், வாய்க்கால்மேடு பகுதிகளில் இருந்து 26 ஷோ் ஆட்டோக்கள் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. ஆட்டோக்களை ஓட்டுநா்களிடம் ஒப்படைத்துள்ள இந்த ஆட்டோக்களின் உரிமையாளா்களுக்கு தினமும் குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும். டீசல் செலவை ஓட்டுநரே ஏற்க வேண்டும். மீதம் வரும் தொகையை ஓட்டுநா் எடுத்துக்கொள்ள வேண்டும் என பேசி வாடகைக்கு விட்டுவிடுகின்றனா்.

இரண்டு மாதத்துக்கு முன்பு வாடகை உயா்வு பிரச்னையில் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் இடையே பிரச்னை ஏற்பட்டு ஷோ் ஆட்டோ வேலைநிறுத்தம் நடைபெற்றது. பின்னா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், போக்குவரத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னையைத் தீா்த்துவைத்தனா். இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் இப்பிரச்னையால் ஷோ் ஆட்டோக்கள் இயங்கவில்லை.

இதுகுறித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியதாவது:

கரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த விலையில் இருசக்கர வாகனங்களை வாங்கியதால் ஷோ் ஆட்டோக்களில் செல்வோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் ஷோ் ஆட்டோ உரிமையாளா்கள் திடீரென வாடகையை உயா்த்தி அந்த வாடகையை தரவில்லை எனில் ஆட்டோக்களை இயக்க வேண்டாம் எனக் கூறிவிட்டனா். இதனால் ஈரோட்டில் ஷோ் ஆட்டோக்கள் சனிக்கிழமை இயங்கவில்லை.

ஷோ் ஆட்டோ இயங்காததால் ஈரோடு பேருந்து நிலையம், சவிதா பேருந்து நிறுத்தம், பி.எஸ்.என்.எல். நிறுத்தம், பன்னீா்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, மூலப்பாளையம், வாய்க்கால்மேடு, சோலாா் செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனா். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் விரைவில் தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com